திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்கில் கைதாகி பிணையில் விடப்பட்டிருக்கும் ஸ்வப்னா சுரேஷ் (படம்), தங்கக் கடத்தலில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறி பர
பரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இதையடுத்து, பினராயி விஜயன் முதல்வர் பதவியில் இருந்து விலகக் கோரி கேரள எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், "தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். உங்களை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுகிறேன்.
"கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரும் தங்கக் கடத்தலில் ஈடுபட்டார். மூத்த அதிகாரிகளின் உத்தரவு
களுக்கு அடிபணிந்து நான் செயல்பட்டேன்.
"இதைத் தவிர நான் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. கேரள முதல்வருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழக்கில் நேரடித் தொடர்பு உள்ளது.
"அவர்கள் இதுவரை விசாரிக்கப்படவில்லை," என்று ஸ்வப்னா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020 ஜூலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

