புதுடெல்லி: இந்தியாவில் இயங்கி வரும் சில்லறை விற்பனைக் குழுமக் கடைகளை ரஷ்யாவில் திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளுக்கும் ரஷ்ய கூட்டமைப்புக்கும் இடையேயான வர்த்தகம் 38 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
14வது பிரிக்ஸ் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரேசில், தென்னாப்பிரிக்க, சீன, ரஷ்ய அதிபர்களுடன் இந்திய பிரதமர் மோடியும் பங்கேற்றார். இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகளில் ரஷ்யாவின் இருப்பு அதிகரித்து வருவதாக அதிபர் புட்டின் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவில் இயங்கி வரும் சில்லறை விற்பனைக் குழுமக் கடைகளை ரஷ்யாவில் திறப்பது குறித்தும் ரஷ்ய சந்தையில் சீனாவில் உற்பத்தியாகும் கார்கள், உபகரணங்கள், வன்பொருள்களின் பங்கை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
"நடப்பாண்டின் முதல் காலாண்டில், ரஷ்ய கூட்டமைப்புக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 38 விழுக்காடு அதிகரித்து, 45 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
"ரஷ்ய வர்த்தக வட்டாரங்களுக்கும் பிரிக்ஸ் நாடுகளின் தொழில் சமூகத்துக்கும் இடையேயான தொடர்புகள் தீவிரமடைந்துள்ளன. ரஷ்ய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும் தங்களது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகின்றன," என்று அதிபர் புட்டின் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதன் காரணமாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளுடனான அதன் உறவில் உரசல் ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு வெறும் இரண்டு விழுக்காடு மட்டுமே ஆகும்.
இந்நிலையில், ரஷ்யா மீதான பொருளியல் தடைகளையும் மீறி ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை தொடர்வதாகச் சுட்டிக்காட்டி இந்தியா தன்னை தற்காத்துக்கொண்டுள்ளது. பிரிக்ஸ் நாடுகளுக்கு ரஷ்யா கணிசமான அளவில் உரங்களை ஏற்றுமதி செய்வதாகவும் அதிபர் புட்டின் கூறியுள்ளார்.
"பிரிக்ஸ் உறுப்பினர்களுடன் இணைந்து அனைத்துலக அளவிலான பரிமாற்றங்களுக்கு என நம்பகமான மாற்று வழிமுறைகளை உருவாக்கி வருகிறது. ரஷ்ய நிதி அமைப்பானது பிரிக்ஸ் நாடுகளின் வங்கிகளுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளது.
"பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து அனைத்துலக அளவில் பயன்படுத்தும் வகையில் மாற்று நாணயம் (செலாவணி) ஒன்றை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்," என்று அதிபர் புட்டின் கூறியுள்ளார்.

