அசாம் கனமழை: இதுவரை 101 பேர் பலி
கௌகாத்தி: அசாம் மாநிலத்தில் நேற்று முன்தினம் மேலும் 12 பேர் உயிரிழந்ததை அடுத்து, மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 101ஆக அதிகரித்து உள்ளது. 32 மாவட்டங்களைச் சேர்ந்த 5.5 மில்லியன் பேர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா, பாராக் நதிகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளதால் கரையோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
அதிகாலை நிலநடுக்கத்தால் மக்கள் பீதி
பெங்களூரு: அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கர்நாடகாவின் ஹாசன் மாவட்ட மக்கள் பீதியடைந்தனர். நேற்று காலை சுமார் ஐந்து மணியளவில் அம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளி்லும் அருகிலுள்ள குடகு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 3.4 புள்ளியாக பதிவான இந்நிலநடுக்கம் ஒரு நிமிடம் நீடித்தது. உயிருடற்சேதம் ஏதுமில்லை என்றபோதிலும் இரு மாவட்டங்களிலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
ரூ.34,615 கோடி வங்கி மோசடி குறித்து சிபிஐ விசாரணை; வழக்குப்பதிவு
புதுடெல்லி: மொத்தம் 17 வங்கிகளை உள்ளடக்கிய கூட்டமைப்பிடம் ரூ.34,615 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக திவான் வீட்டுவசதி நிதிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் கபில் வதாவன்மீது சிபிஐ வங்கி மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், ஆறு சொத்துச் சந்தை நிறுவனங்கள்மீதும் மோசடி வழக்கு பாய்ந்துள்ளது. சிபிஐ விசாரிக்கும் ஆகப்பெரிய வங்கி மோசடி வழக்கு இதுவாகும். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் வங்கி கூட்டமைப்பு புகார் எழுப்பியது. இதையடுத்து சிபிஐ இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டது. அதில், புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, வழக்கு பதிவாகியுள்ளது.

