லக்னோ: திருமணக் கொண்டாட்டத்தின்போது மணமகன் துப்பாக்கியால் சுட்டதில், எதிர்பாராத விதமாக அவரது நண்பரின் தலையில் குண்டு பாய்ந்தது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான மணீஷ் என்பவரின் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அன்று மாலை மணமகனை ஊர்வலமாக அழைத்து வந்தனர். அதன் பின்னர் அவரது நண்பரான 26 வயது பாபுலால் என்பவர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை மணீஷிடம் கொடுத்து வானத்தை நோக்கிச் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துமாறு கூறி உள்ளார்.
மணீஷும் துப்பாக்கியை வாங்கி வானத்தை நோக்கிச் சுட, எதிர்பாராத விதமாக அதிலிருந்து வெளியான குண்டு, பாபுலால் தலையில் பாய்ந்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
பாபுலால் ராணுவத்தில் பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மணமகன் மணீஷை காவல்துறை கைது செய்துள்ளது.
இதனால் கொண்டாட்ட நிகழ்வு துக்கத்தில் முடிந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

