கல்வியாண்டு இழப்பைத் தடுக்க உதவுங்கள்: உக்ரேன் மருத்துவ மாணவர்கள் கோரிக்கை

கல்வியாண்டு இழப்பைத் தடுக்க உதவுங்கள்: உக்ரேன் மருத்துவ மாணவர்கள் கோரிக்கை

2 mins read
72be573a-af89-4b7f-9968-4c9593f99077
-

புது­டெல்லி: உக்­ரே­னில் இருந்து நாடு திரும்­பிய மருத்­துவ மாண­வர்­கள் தங்­க­ளு­டைய கல்வி தடை­படா­மல் இருக்க மத்­திய, மாநில அர­சு­கள் நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி டெல்­லி­யில் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

உக்­ரேன் மீது ரஷ்யா தொடர் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கிறது. இதன் கார­ண­மாக உக்­ரே­னில் மருத்துவப் படிப்பை மேற்­கொண்­டி­ருந்த ஆயிரக்­க­ணக்­கான இந்­திய மாண­வர்­கள் நாடு திரும்ப வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது.

இத­னால் அவர்­கள் கல்­வி­யைத் தொடர முடி­யா­மல் உள்­ளது. இந்­நிலை­யில், உக்­ரேன் கல்­லூ­ரி­களில் படித்து வந்த டெல்லி, உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட வட­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்த மருத்­துவ மாண­வர்­களும் அவர்­க­ளது பெற்­றோ­ர்களும் டெல்லி ஜந்­தர் மந்­தர் பகு­தி­யில் உள்ள தேசிய மருத்துவ ஆணையம் முன்பு நேற்று முன்­தினம் திரண்டு ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

உக்­ரே­னில் நில­வும் பதற்ற நிலை கார­ண­மாக அங்கு படிப்பைத் தொடர முடி­ய­வில்லை என்­றும் இதனால் ஒரு கல்­வி­யாண்டை இழக்க நேரிட்­டுள்­ளது என்­றும் அவர்­கள் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

இந்த இழப்பை தடுக்க ஏது­வாக இந்த ஒரு கல்­வி­யாண்­டில் மட்­டும் இந்­தி­யா­வில் உள்ள மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் படிப்பைத் தொடர அனு­ம­திக்க வேண்­டும் என அம்­மா­ண­வர்­கள் மத்­திய அர­சி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

மருத்­துவ மாண­வர்­கள் எதிர்­கால மருத்­து­வர்­கள் என்­ப­தால், இணைய வழிக்கல்வி என்­பது சரி­யாக இருக்­காது என்­றும் கல்வி­யாண்டு இழப்பை தடுக்க மத்­திய அரசு உத­வ ­வேண்­டும் என்றும் உக்­ரேன், இந்­திய மருத்துவ மாண­வர்­க­ளின் பெற்­றோர் சங்கம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, மருத்­துவ மாண­வர்­க­ளின் கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி உச்ச நீதி­மன்­றத்­தில் பொது­நல மனு ஒன்று தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

அதன் மீதான விசா­ரணை விரை­வில் நடை­பெற உள்ள நிலை­யில், உக்­ரே­னில் படித்து வந்த மருத்­துவ மாண­வர்­களை இந்­திய மருத்­து­வக் கல்­லூ­ரி­களில் சேர்க்கலாம் என்று பிரதமர் மோடிக்கு இந்­திய மருத்­துவ சங்கம் பரிந்­து­ரைத்­துள்­ளது.