செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2e2e3c91-9432-4f80-acb7-b5b0025fd4ee
-

அமித்ஷா: 19 ஆண்டுகள் வலியுடன் போராடினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: குஜராத் கலவர வழக்கை முன்வைத்து பிரதமர் மோடி குறித்து பலர் அவதூறாகப் பேசினர் என்றும் அந்த வழக்கு விசாரணை 19 ஆண்டுகள் நடந்தபோது பிரதமர் அமைதி காத்தார் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 19 ஆண்டுகள் வலியைத் தாங்கிக்கொண்டு பிரதமர் மோடி போராடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக நாட்டில் அரசியல் சாசனத்திற்கு மரியாதை தருவதில் பிரதமர் நரேந்திர மோடி முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்றும் அமித்ஷா பாராட்டியுள்ளார்.

'ஜி7' மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி

புதுடெல்லி: 'ஜி7' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று ஜெர்மனி புறப்பட்டுச் சென்றார். இம்முறை சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் ஆகியவை குறித்து அவர் மாநாட்டில் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. மாநாடு முடிந்த பின்னர் பிரதமர் ஐக்கிய அரபு சிற்றரசுக்கு செல்லக்கூடும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய நிதி ஆயோக் தலைவராக பரமேஸ்வரன் ஐஏஎஸ் நியமனம்

புதுடெல்லி: வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கும் திட்டக் குழுவுக்கு (நிதி ஆயோக்) தலைவராக ஐஏஎஸ் அதிகாரி பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1981ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் கீழ் வரும் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள இவர், உலக வங்கியின் குடிநீர், சுகாதாரப் பிரிவிலும் பணியாற்றி உள்ளார். வியட்நாம், சீனா, எகிப்து, லெபனான் ஆகிய நாடுகளில் பணியாற்றிய பரமேஸ்வரன், 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை மத்திய நீர்வளத்துறை அமைச்சின் செயலராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

ஆறு மணி நேரத்தில் ரூ.2 லட்சம் அபராதம் வசூலித்த உதவி ஆய்வாளர்

பெங்களூரு: கர்நாடகாவில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் எம்.சிவண்ணா, கடந்த 21ஆம் தேதி ஆறு மணி நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்க‌ளிடம் இருந்து இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளார். மொத்தம் 249 போக்குவரத்து விதிமீறல்களுக் காக இந்த அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தளவு இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக வசூலித்தது இதுவே முதல் முறை என்கிறார் சிவண்ணா.

ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை

பெங்களூரு: தமது 60வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆசியா வின் ஆகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான தொழிலதிபர் கவுதம் அதானி சமூக நலத்திட்டங்களுக்காக ரூ. 60 ஆயிரம் கோடி நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்தத் தொகையானது, அவரது பெயரில் இயங்கும் அறக்கட்டளை மூலம் சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதானி அறக்கட்டளை மூலம் 37 லட்சம் கிராம மக்கள் பலனடைந்துள்ளனர் என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.