பிரதமர் மோடிக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு
பெர்லின்: பிரதமர் நரேந்திர மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனிக்குச் சென்றுள்ளார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி சென்றார். முனிச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமருக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி இசை நிகழ்ச்சி நடத்தி பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி முனிச்சி விமான நிலையத்துக்கு வெளியே இந்தியர்கள் காத்திருந்து வரவேற்பு அளித்தனர். தேசிய கொடியை ஏந்தி அவர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கும் தனியார் பள்ளி மாணவர்கள்
பனஸ்கந்தா: குஜராத் மாநிலத்தில் அம்மாநில அரசு நடத்தும் பள்ளிக்கூடங்களின் தரம் உயர்ந்துள்ளதை அடுத்து, அங்கு தனியார் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளை, பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குஜராத் அரசின் தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, மாநிலம் முழுவதும் 2018-19 ஆண்டில் 33,822 மாணவர்களும், 2019-20 ஆண்டில் 31,382 மாணவர்களும் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு இடமாறியுள்ளனர். பனஸ்கந்தா மாவட்டத்தில் மட்டும் 2,969 தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு, ஆறு தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் குடிநீர் தட்டுப்பாடு
மும்பை: மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் வரும் காலங்களில் அங்கு குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மும்பையில் மழைக்காலம் தொடங்கினாலும் அங்குள்ள நீர்ப்பிடிப் பகுதிகளில் மழை பெய்யாததால் குடிநீர் வழங்கும் அங்கிருக்கும் ஏழு ஏரிகளின் நீர் மட்டம் தேவைக்கேற்ப உயரவில்லை என்று கூறப்படுகிறது.
கர்நாடக கல்வித்துறை பெயர் மாற்றம்
பெங்களூர்: கர்நாடக பள்ளிக்கல்வித்துறையின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை இனி 'பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை' என்று அழைக்கப்படும். இந்த பெயர் மாற்றம் தொடர்பாக நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை என்று தான் நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையில் பெயர் மாற்றப்பட்டு உள்ளது.

