மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்யா தாக்கரே வருத்தம்
மும்பை: சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் லட்சங்களுக்கும் கோடிகளுக்கும் ஆசைப்பட்டு தங்களை விற்றுவிட்டனர் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும் மாநில அமைச்சருமான ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
சொந்த கட்சியினரே இவ்வாறு துரோகம் செய்வார்கள் என கட்சித்தலைமை எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிவசேனாவைச் சேர்ந்த 40க்குள் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
நடப்பு ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக அவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்களை ஆதித்ய தாக்கரே கடுமையாக சாடியுள்ளார்.
"மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டபோது, அதில் இடம்பெற்ற காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுக்குத் துரோகம் செய்ய வாய்ப்பு உள்ளதாக சிலர் கூறினார்கள். கடைசியில் சொந்தக் கட்சியினரே எங்களுக்குத் துரோகம் இழைத்துள்ளனர்.
"லட்சங்களுக்கும் கோடிகளுக்கும் ஆசைப்பட்டு அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களை விற்றுவிட்டனர்.
"அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தலைமை ஏற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே பெரிய நாடகத்தை நடத்திவிட்டு கட்சிக்கு எதிராக திரும்பியுள்ளார்," என்றார் ஆதித்ய தாக்கரே.
அசாமில் வெள்ளப்பெருக்கு காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அம்மாநில மக்கள் தங்கும் இடமும் உணவும் இன்றி தவித்துக் கொண்டிருக்கும்போது அங்கு முகாமிட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதிருப்தி எம்எல்ஏக்களின் ஒரு நாள் உணவுக்காக ஒன்பது லட்சம் ரூபாய் செலவிடப்படுவதாகவும் அதைவிட அவமானத்துக்குரிய விஷயம் இருக்க முடியாது என்றும் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
இதற்கிடையே, அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்துவதற்கான முயற்சிகளை சிவசேனாவைச் சேர்ந்த ஐந்து எம்பிக்கள் அடங்கிய குழு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏக்நாத் ஷிண்டேயின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். முதற்கட்டமாக, ஸ்ரீகாந்த்தை சமாதானப்படுத்தி, அவர் மூலமாக ஏக்நாத்தை அணுக அவர்கள் முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.

