இந்தியாவின் உதயப்பூர் நகரில் ஒரு தையல்காரரின் தலையை துண்டித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்த பாரதிய ஜனதா முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக அந்த ஆடவர் கொல்லப்பட்டார். கொலையைக் காணொளி எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்தனர் கொலையாளிகள்.
நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததிலிருந்து மாண்டவருக்கு கடந்த 10 நாள்களாக கொலை மிரட்டல்கள் கிடைத்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் கொலையாளிகள் கடைக்குள் வாடிக்கையாளர்கள் போன்று நடித்து நுழைந்ததாகவும், தையல்காரரை கத்தியால் தாக்கியதாகவும் காவல் துறை கூறியது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து உதயப்பூரில் இணையத் தொடர்பு முடக்கப்பட்டது. மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
கொலை செய்ததாக நம்பப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த காவல் துறையினர் விசாரணை துரிதமாக நடைபெறும் என உறுதியளித்தனர்.
மக்களை நிதானமாக இருக்குமாறும், காணொளியைப் பகிர்ந்துகொள்ளவேண்டாம் என்றும் ராஜஸ்தானின் முதலமைச்சர் அசோக் கெலாட் கேட்டுகொண்டார்.