கேரள, கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியில் திடீர் நில அதிர்வு
திருவனந்தபுரம்: கேரளாவின் எல்லைப் பகுதியிலும் கர்நாடகாவின் குடகு பகுதியிலும் நேற்று முன்தினம் காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். காலை 7.45 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் இந்த அதிர்வு 3.5 புள்ளிகளாக பதிவானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவின் வட எல்லையில் அமைந்துள்ள காசர்கோடு மாவட்டத்தில் நில அதிர்வு நன்கு உணரப்பட்டதாகவும் சுமார் நான்கு விநாடிகளுக்கு அந்த அதிர்வு நீடித்தது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மும்பை அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி 19 ஆக உயர்வு
மும்பை: அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது என மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மும்பையின் குர்லா பகுதியில் இருந்த அடுக்குமாடிக் கட்டடம் திங்கட்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் பலியானதாகவும் மீட்புப்பணிகள் நடப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர். மீட்புப் படையினர் துரித கதியில் செயல்பட்டு இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த இருபதுக்கும் மேற்பட்டவர்களை மீட்டனர். இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது என்றும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டட உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
மருத்துவமனைக்குள் புகுந்து குழந்தையை கவ்விச்சென்ற நாய்
சண்டிகர்: மருத்துவமனைக்குள் நுழைந்த தெருநாய் ஒன்று, பிறந்து இரண்டு நாள்களே ஆன சிசுவை கவ்விச்சென்ற சம்பவம் ஹரியானாவில் நிகழ்ந்துள்ளது. பானிபட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை குழந்தை பிறந்தது. திங்கட்கிழமையன்று இரவு மருத்துவமனையில் தாய், சேயுடன் அந்தப் பெண்ணின் பாட்டி துணைக்கு இருந்துள்ளார். இந்நிலையில் பாட்டி உறங்கிக்கொண்டிருந்தபோது மருத்துவமனைக்குள் நுழைந்த தெருநாய் ஒன்று, பச்சிளம் குழந்தையை கவ்விக்கொண்டு வெளியே சென்றுவிட்டது. பின்னர் அது கடித்துக் குதறியதில் பிறந்து இரு தினங்களே ஆன அக்குழந்தை இறந்துபோனது.
கேரளாவில் இருபது குழந்தைகளுக்கு மர்மக் காய்ச்சல்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள நெடும்கன்டம் கல்லார் பகுதியில் இயங்கி வரும் தொடக்கப் பள்ளியில் இருபது குழுந்தைகளுக்கு தக்காளிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இக்காய்ச்சல் ஒரு வாரத்தில் தானாக சரியாகவிடும் என்றபோதிலும், மற்றவர்களுக்கும் பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சலும் அரிப்பும் ஏற்பட்டதை அடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் தக்காளிக் காய்ச்சல் தாக்கியது உறுதியானது.

