புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களில் 31 விழுக்காட்டினர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. தமிழக எம்பிக்கள் ஆறு பேரும் இதில் அடங்குவர்.
ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய இரு அமைப்புகள் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளன.
மாநிலங்களவையின் நடப்பு எம்பிக்கள் தங்கள் மீதான குற்ற வழக்கு, சொத்து விவரங்களை தெரிவித்துள்ளனர். அவற்றின் அடிப்படையில், அவ்விரு அமைப்புகளும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
மாநிலங்களவையில் மொத்தம் 233 உறுப்பினர்கள் உள்ள நிலையில், ஏழு பேர் விவரங்களை வெளியிடவில்லை. மீதமுள்ள 226 பேரில் 197 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இது மொத்த எண்ணிக்கையில் 87 விழுக்காடு ஆகும்.
71 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் 31 விழுக்காடு ஆகும்.
இவர்களில் இருபது பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேர், திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூன்று பேர், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஐந்து பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (4 பேர்), ஆம் ஆத்மி (3 பேர்), ஒய்எஸ்ஆர் (3 பேர்), தேசியவாத காங்கிரஸ் (2 பேர்) கட்சியினரும் குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிர எம்பிக்கள் 12 பேர் மீது வழக்குகள் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேர் இப்பட்டியலில் உள்ளனர்.
37 உறுப்பினர்கள் மீது கடும் குற்றங்களுக்காக வழக்குப்பதிவாகி உள்ளது.
அவர்களில் இருவர் கொலை வழக்கையும் நான்கு பேர் கொலை முயற்சி வழக்கையும் எதிர்கொண்டுள்ளனர்.
நான்கு எம்பிக்கள் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி.வேணுகோபால் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவாகி உள்ளது.

