புதுடெல்லி: நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களின் உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தனர். இதையடுத்து நெகிழிப் பயன்பாட்டை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களுக்கு தடைவிதிப்பது என முடிவானது. இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதியே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்தது.
அதன்படி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களுக்கான தடை ஜூலை 1 (நாளை) முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இனி நாடு முழுவதும் புதிய வணிக உரிமங்கள் வழங்கும்போது, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களை விற்கமாட்டோம் என்ற நிபந்தனை விதிக்கப்படும். இதை உள்ளூர் அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிபந்தனையை மீறும் பட்சத்தில் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும்.
தடையை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இந்தியாவில் கடந்த 2019-20ஆம் ஆண்டில் மட்டும் 34 லட்சம் டன் நெகிழிக் கழிவுகள் உருவாகியுள்ளன.

