ஸ்ரீநகர்: இந்திய எல்லைப் பகுதியில் அண்மைக்காலமாக பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் ஆளில்லா வானூர்திகள் ஊடுருவ முயற்சி செய்வது தெரியவந்துள்ளது.
வரும் நாள்களில் எல்லையில் ஆளில்லா வானூர்திகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் இந்திய ராணுவமும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருகிறது.
முதற்கட்டமாக ஜம்மு, காஷ்மீரில் ஆளில்லா வானூர்திகளின் நடமாட்டத்தைக் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் பஞ்சாப் மாநில எல்லையிலும் அனுமதி இன்றி பறக்கும் ஆளில்லா வானூர்திகளைச் சுட்டு வீழ்த்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் ஆளில்லா வானூர்திகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அவை எந்த நேரத்திலும் இந்திய எல்லைக்குள் ஊடுருவக்கூடும் என்று உளவுத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள ராணுவத் தளத்தின் மீது பயங்கரவாதிகள் ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவியது.
மேலும், ஆளில்லா வானூர்திகள் மூலம் போதைப்பொருள், சிறிய ரக ஆயுதங்களை இந்திய பகுதிக்குள் கடத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஊடுருவல் முயற்சிகளை அவ்வப்போது பாதுகாப்புப் படையினர் முறியடித்து வருகின்றனர்.
இந்நிலையில், எதிரிகளின் ஆளில்லா வானூர்திகளைக் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்த சிறப்பு அதிரடிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்கள் முழுவீச்சில் செயல்படத் துவங்கி உள்ளன.

