புதுடெல்லி: நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ள உதய்பூர் கொலை வழக்கு தொடர்பில் இருவர் கைதாகி உள்ளனர். அவர்களில் ரியாஸ் அட்டாரி என்பவருக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் தவாத் இ இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா என்பவர் அவதூறான கருத்துகளைக் கூறியது இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது பாஜக கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள தையல்கடை உரிமையாளர் கன்னையா லால் என்பவர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரை இரண்டு பேர் கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். இந்தக் கொடூரச் செயலை காணொளியாகப் பதிவு செய்து சமூக ஊடங்களில் வெளியிட்டனர்.
நூபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் கன்னையாவை கொன்றதாக அவர்கள் விளக்கம் அளித்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி கொலையாளிகளைக் கைது செய்தது. அதன் பிறகு நடந்த விசாரணையில், கைதான ரியாஸ் அட்டாரி கடந்த 2014ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்குச் சென்று, அங்கு இயங்கி வரும் தவாத் இ இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்பினரைச் சந்தித்தது தெரியவந்துள்ளது.
எனினும் அந்த அமைப்பின் உத்தரவின் பேரில்தான் கன்னையா கொல்லப்பட்டாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. கொலை வழக்கில் கைதாகி உள்ள ரியாஸ் தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருபது ஆண்டுகளாகிவிட்டதும் தெரியவந்துள்ளது.

