புதுடெல்லி: எதிர்வரும் 2035ஆம் ஆண்டில் இந்தியாவில் நகர்ப்புற மக்கள் தொகை சுமார் 675 மில்லியனாக இருக்கும் என ஐநா மன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளையில் சீனாவில் இந்த எண்ணிக்கை ஒரு பில்லியனாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் அனைத்துலக நகர்ப்புற மக்கள் தொகை மீண்டும் அதிகரிக்கத் துவங்கும் என்றும் 2050ஆம் ஆண்டு, மேலும் 2.2 பில்லியன் பேர் இந்த எண்ணிக்கையில் இணைவார்கள் என்றும் ஐ.நா. தெரிவித்தது. இது தொடர்பான அறிக்கையை அம்மன்றம் புதன்கிழமை வெளியிட்டது.
2035ஆம் ஆண்டில் இந்தியாவில் நகர்ப்புற மக்கள் தொகை விகிதமானது மொத்த மக்கள் தொகையில் 43.2 விழுக்காடாக இருக்கும். இச்சமயம் சீனாவில் 1.05 பில்லியன் பேர் நகர்ப்புறங்களில் வசிப்பர். ஆசியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 2.99 பில்லியனாக இருக்கும்.
கடந்த இருபது ஆண்டுகளில் ஆசிய வட்டாரத்தில் சீனாவும் இந்தியாவும் மிக வேகமான பொருளியல் வளர்ச்சியைக் கண்டுள்ளன என்றும் அதன் காரணமாக வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது என்றும் ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது.

