மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே
நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என பாஜக முடிவு செய்துள்ளது.
முன்னதாக சிவசேனாவில் இருந்து விலகி தனிக்குழுவாக செயல்படும் அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது.
ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட திருப்பத்தை அடுத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.
முன்னதாக மகாராஷ்டிர சட்டப்பேரவையைக் கூட்டி தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, வாக்கெடுப்பு நடத்த தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது சிவசேனா கட்சி. எனினும் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததை அடுத்து, நேற்று முன்தினம் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே. பின்னர் ஆளுநரைச் சந்தித்து பதவி விலகல் கடிதத்தை அவர் ஒப்படைத்தார்.
சட்டப்பேரவையில் நடைபெறும் எண்ணிக்கை விளையாட்டில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் சட்ட மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்தார். துரோகிகள் தம்மை முதுகில் குத்திவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மீண்டும் மக்களைத் திரட்டப் போவதாகவும் சிவசேனா ஆட்சி மீண்டும் அமையும் என்றும் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 பேரும் 11 சுயேட்சை எம்எல்ஏக்களும் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் பாஜகவுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.
இதற்கிடையே, அதிருப்தி எம்எல்ஏக்களுக்குத் தலைமையேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே நேற்று மதியம் மும்பை வந்தடைந்தார். பின்னர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவரும் ஆளுநரை சந்தித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்பார் என்று அறிவித்தார் தேவேந்திர ஃபட்னாவிஸ்.
மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமையும் பட்சத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராகவும் பொறுப்பு ஏற்பார்கள் என்று கூறப்பட்டது.

