கோல்கத்தா: கணினி அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவருக்கு கூகல், அமேசான், ஃபேஸ்புக் ஆகிய மூன்று பெரிய நிறுவனங்களில் இருந்து வேலை வாய்ப்பு தேடிவந்துள்ளது.
பிசாக் மொண்டல் என்ற அந்த மாணவர் கோல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கடைசிப் பருவத் தேர்வு எழுத வேண்டியுள்ளது. இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் இவருக்கு ஆண்டுக்கு ரூ.1.8 கோடி ஊதியம் தர முன்வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பிசாக் மொண்டல். அவரது தாயார் அங்கன்வாடி ஊழியராகப் பணியாற்றுகிறார். சிறு வயதில் இருந்தே படிப்பில் கெட்டிக்காரராக விளங்கிய பிசாக், சிறந்த மதிப்பெண்களைப் பெற்றதால் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளது.
இன்று அந்தப் பல்கலையில் படித்த மாணவர்களில், தொடக்கத்திலேயே அதிக ஊதியத்துடன் பணியில் சேரும் மாணவர் என்ற பெருமைக்கு உரியவராக பிசாக் மொண்டல் உள்ளார்.
கொரோனா முடக்க நிலையின்போது பல்வேறு நிறுவனங்களில் பயிற்சிக்காக பணியாற்றினார் பிசாக். அதன் மூலம் பாடத்திட்ட ஆய்வுகளுக்கு வெளியே அறிவைச் சேகரிக்கும் வாய்ப்பைப் பெற்றதாகவும் அந்த அனுபவங்கள் நேர்முகத் தேர்வில் வெற்றிபெற உதவியது என்றும் கூறுகிறார்.
வரும் செப்டம்பர் மாதம் லண்டனுக்கு பறந்து ஃபேஸ்புக் நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார் பிசாக் மொண்டல்.
"மூன்று பெரிய நிறுவனங்களில் இருந்து முழு நேர வேலைக்கான பணி நியமன ஆணைகளைப் பெற்றுள்ளேன். எனினும் அதிக ஊதியம் வழங்கியதன் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தை தேர்ந்தெடுத்தேன்," என்கிறார் பிசாக் மொண்டல். கடந்த ஆண்டு ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் ஒரு கோடி ரூபாய் சம்பளத்திற்கு வேலைவாய்ப்பை பெற்ற நிலையில், பிசாக் மொண்டல் அவர்கள் அனைவரையும் தற்போது பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

