திருவனந்தபுரம்: கோபித்துக் கொண்டு தொடர்புகொள்ளாமல் இருந்த தம்பியைச் சமாதானப்படுத்த அக்கா எழுதிய கடிதம் உலகச் சாதனையாகி உள்ளது.
கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணபிரியா தனது கணவருடன் முண்டகாயம் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.
ஆண்டுதோறும் அனைத்துலக சகோதரர்கள் தினத்தன்று அவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தன் தம்பி கிருஷ்ண பிரசாத்தை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு பணிச்சுமை காரணமாக அவரால் தம்பியை தொடர்புகொள்ள முடியவில்லை. தம்பி கிருஷ்ண பிரசாத் தொடர்புகொண்டபோதும் பேச முடியவில்லை.
இதனால் கோபம் அடைந்த கிருஷ்ணபிரசாத் அக்காவை தொடர்புகொள்ளாததுடன், வாட்ஸ்-அப் தொடர்பையும் துண்டித்துவிட்டார்.
தம்பியின் கோபத்தை உணர்ந்த அக்கா கிருஷ்ணபிரியா, நீண்ட கடிதம் ஒன்றை எழுத முடிவு செய்தார். அதன்படி கடிதம் எழுதத் தொடங்கிய அவர், சிறு வயது முதல் நடந்த பல்வேறு சம்பவங்களை அதில் குறிப்பிட்டார்.
சிறு வயதில் போட்ட சண்டை, பிறந்தநாள் கொண்டாட்டம், பெற்றோருடன் வெளியூர் சென்றது, பெற்றோரின் அன்பு என சுமார் 12 மணி நேரம் இடைவிடாமல் எழுதியதில், 434 மீட்டர் நீளமுள்ளதாக அந்தக் கடிதம் அமைந்தது.
சுமார் ஐந்து கிலோ கொண்ட அந்தக் கடிதத்தை அஞ்சல் வழி தம்பிக்கு அனுப்பி வைத்தார் கிருஷ்ண பிரியா.
அதைக் கண்டு அசந்துபோன கிருஷ்ண பிரசாத், மேற்கு வங்க தலைநகர் கோல்கத்தாவில் உள்ள 'யுனிவர்சல் ரெக்கார்ட் ஃபோரம்' என்ற நிறுவனத்துக்கு, கடிதத்தை அனுப்பினார்.
இதையடுத்து அது உலக சாதனை படைத்த கடிதம் என அந்நிறுவனம் சான்றளித்ததுடன், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவும் பரிந்துரைத்துள்ளது.

