செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f5ebfddd-fec7-4c1d-9242-e539138146b6
-

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிவு

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து ரூ.79 ஆனது. வரலாற்றில் முதல் முறையாக இந்திய ரூபாய் இந்த அளவுக்கு சரிந்துள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.80ஆக சரியக்கூடும் என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.

ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் எட்டு பேர் பலி

அமராவதி: ஆட்டோ மீது மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததில், எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்தியசாய் மாவட்டத்தில் இந்தத் துயரச் சம்பவம் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது. சில்லகொண்டையபள்ளி என்ற இடத்தில் விவசாயப் பணிக்காக எட்டு தொழிலாளர்கள் ஒரே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோர மின் கம்பத்தில் இருந்து மின்கம்பி ஒன்று திடீரென அறுந்து ஆட்டோ மீது விழுந்தது. இதனால் அந்த ஆட்டோவில் தீப்பற்றியது. அதில் இருந்த அனைவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த ஐந்து வயதுச் சிறுவன் மீட்பு

போபால்: மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஐந்து வயதுச் சிறுவனை மீட்புக் குழுவினர் எட்டு மணி நேர போராட்டத்துக்குப்பின் பத்திரமாக மீட்டனர். மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்திலுள்ள நாராயண்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலேஷ் யாதவ். இவரது ஐந்து வயது மகன் திபேந்திரா நேற்று முன்தினம் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். முப்பது அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்க தேசிய, மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் கடுமையாகப் போராடினர். மேலும், திடீர் மழையும் சவாலாக அமைந்தது. எனினும் எட்டு மணி நேரம் விடாமுயற்சியுடன் செயல்பட்டு அச்சிறுவனை அவர்கள் மீட்டனர்.

இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அமர்நாத் யாத்திரை நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் கட்டமாக 4,890 பக்தர்கள் பயணத்தைத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.