பெங்களூரு: காவிரியில் நீர் மட்டம் அதிகரித்து வருவதை அடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
காவிரியாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. இதனால் காவிரியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
அணையில் இருந்து விநாடிக்கு பத்தாயிரம் முதல் 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. குடகு, சிக்மங்களூர், ஹசன், மைசூர், மண்டியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இவை எல்லாம் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளாகும். இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கேஆர்எஸ், கபினி ஆகிய இரு அணைகளுக்கும் கடந்த சில தினங்களாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேஆர்எஸ் அணைக்கு 34,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து 3,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அந்த அணையின் உயரம் 124.80 அடியாகும். இந்நிலையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் தற்போது 121.42 அடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எந்த நேரத்திலும் அணை நிரம்பிவிடக்கூடும் என்பதால், உபரி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அணை நிரம்பும் வரை காத்திருக்காமல், காவிரி கரையோரக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

