மும்பை: நாட்டின் மேற்குக்கரையோர மாநிலங்களில் அடுத்த ஐந்து தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை காரணமாக கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அம்மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வட மாநிலங்கள் சிலவற்றிலும் மழையின் தாக்கம் குறைந்தபாடில்லை.
அசாம் மாநிலத்தில் நீடித்து வரும் மழை காரணமாக இதுவரை ஆறு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 190ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி, அரியானா மாநிலங்களிலும் கடந்த இரு தினங்களாக மழை நீடித்து வருகிறது.
காஷ்மீரின் அமர்நாத் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழை காரணமாக 17 பேர் மாண்டுவிட்டனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவிலும் மழை தன் ஆட்டத்தை தீவிரமாக்கி உள்ளது. அங்கு மழை, வெள்ளம் காரணமாக 130 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காட்சிரோலி, ஹிங்கோலி, நாண்டெட், மாரத்வாடா பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், அங்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 76 பேர் பலியாகிவிட்டனர்.
மாநிலம் முழுவதும் 35 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளத்தில் சிக்கிய 4,917 பேர் மீட்கப்பட்டு அம்முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மகாராஷ்டிர பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், அம்மாநிலத்தில் 125 கால்நடைகள் இறந்துள்ளன. 838 வீடுகள் சேதமடைந்துள்ளன. தலைநகர் மும்பையில் மீட்பு, நிவாரணப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானா மாநிலத்தில் மழை தீவிரமடைந்துள்ளதால் முதல் மூன்று நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயசங்கர் பூபல்பள்ளி, நிசாம்பாத், ராஜண்ணா மாவட்டங்களில் கடும் மழை பெய்து வரும் நிலையில், பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தகுந்த காரணங்கள் இன்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் சந்திரசேகர ராவ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
வெள்ள பாதிப்பு, மீட்புப் பணிகள் குறித்து அரசு உயரதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்ட முதல்வர், தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வெள்ளத் தடுப்பு, மீட்புப் பணிகள் குறித்து பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

