கொழும்பு: உறுதி அளித்தபடி அதிபர் பதவியிலிருந்து கோத்தபாய ராஜபக்சே விலகாததால் இலங்கை பிரதமர் அலுவலகத்தின் முன்பு நேற்று பேரளவில் ஒன்றுதிரண்ட மக்கள் அரசாங்க எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.
தற்காலிக அரசாங்கத் தலை
வராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கே தமது பிரதமர் பொறுப்பையும் கைவிடவேண்டும் என்று அவர்கள் விண்ணதிர முழக்கமிட்டனர்.
பிரதமரின் அலுவலகத்தைச் சுற்றி முற்றுகையிட்ட அவர்கள், அலுவலகத்தின் உச்சி வரை ஏறிச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாலத்தீவுக்குத் தப்பிச் சென்ற இலங்கை அதிபர் கோத்தபாய நேற்று பதவி விலகுவதாக முன்னர் அறிவித்து இருந்தார். நாடாளுமன்ற சபாநாயகரும் பதவி விலகல் கடிதம் நேற்று பிற்பகலில் வரும் என்று கூறியிருந்தார்.
ஆனால் அதற்குப் பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயை தற்காலிக அரசாங்கத் தலைவர் அல்லது தற்காலிக அதிபராக கோத்தபாய நியமித்ததாக அறிவிப்புகள் வெளியாயின.
அதிபர் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அல்லது அவர் நாட்டில் இல்லாத நேரத்தில் அதிபரின் குறிப்பிட்ட சில அதிகாரங்களை தற்காலிக அதிபர் நிறைவேற்றலாம்.
ஏற்கெனவே ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியைவிட்டு விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த மக்கள், அவர் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டதும் அதிகமாகக் கொந்தளித்தனர்.
பிரதமர் அலுவலக முற்றுகையின்போது நேற்று 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரி விக்கப்பட்டது.

