கொழும்பு: இலங்கை தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு ரஷ்யாதான் காரணம் என்று உக்ரேனிய அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரேன்மீது மாஸ்கோ படையெடுத்ததன் விளைவாக உணவுப் பொருள் ஏற்றுமதி தடைபட்டிருப்பதாகவும் இதனால் உலகெங்கும் உணவு விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய நிலையில் பல்வேறு இடங்களில் நெருக்கடி உருவாக இது வித்திட்டதாகத் திரு ஸெலன்ஸ்கி சாடினார்.
தென்கொரியத் தலைநகர் சோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் உக்ரேனிய அதிபர் காணொளி வழியாக உரையாற்றினார்.
ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரேன் மட்டும் பாதிப்படையவில்லை என்று கூறிய அவர், இலங்கையில் எரிபொருள், உணவு விலை உயர்வால் அதிர்ச்சியளிக்கும் வகையில் சமூகக் கொந்தளிப்பு ஏற்பட்டதைச் சுட்டினார்.
இத்தகைய நிலை இலங்கையைப் போலவே உலகின் மற்ற நாடுகளிலும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் இதற்கெல்லாம் மாஸ்கோதான் காரணம் என்றும் அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கி அந்த மாநாட்டில் எடுத்துரைத்ததாக இலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

