செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9336b70f-c0f7-41da-8d83-7d9198f4a6fb
-

ராணுவ வீரரின் துப்பாக்கி அபகரிப்பு

கொழும்பு: நாடாளுமன்றத்துக்கு அருகே நேற்று முன் தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ராணுவ வீரர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து 'டி-56' ரகத் துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அபகரித்ததாகக் கூறப்படுகிறது.

ஏறத்தாழ 60 தோட்டாக்கள், தானியக்க முறையில் அவற்றைத் துப்பாக்கியில் செலுத்தும் 'மேகசின்' எனப்படும் கருவிகள் ஆகியவற்றையும் அவர்கள் பறித்துச் சென்றனர். சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரும் தாக்கப்பட்டார்.

அனைத்துலக அளவிலான கைதாணை பிறப்பிக்க பிரிட்டிஷ் 'எம்பி' வலியுறுத்து

கொழும்பு: இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிற்கு எதிராக அனைத்துலக அளவிலான கைதாணை பிறப்பிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவரான எட் டேவி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இவ்வாறு கூறினார்.

இலங்கையில் ஜனநாயகவாதிகளுக்கு ஆதரவளிக்கவும் பொருளியல் நெருக்கடிக்குத் தீர்வுகாணவும் பிரிட்டன் அதன் தோழமை நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக இலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மே மாதம் புதிய உச்சத்தைத் தொட்ட உற்பத்தியாளர் விலைக் குறியீடு

கொழும்பு: உற்பத்தியாளர் விலைக் குறியீடு, சென்ற மே மாதம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

மே 2022உடன் முடிவடைந்த 12 மாதங்களில் இது 75.9 விழுக்காடாகப் பதிவானது. ஏப்ரலில் இந்தக் குறியீடு 52.4 விழுக்காடாக இருந்தது. இதன் எதிரொலியாக அடுத்த சில மாதங்களில் பயனீட்டாளர் விலைக் குறியீடு 70 விழுக்காட்டுக்கும் மேல் உயரக்கூடும் என்று நாட்டின் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.