கொழும்பு: இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திரு ரணில் விக்கிரமசிங்கே நாட்டை வழிநடத்தும் சூழல் ஏற்பட்டால், தமிழர்களின் விருப்பங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (படம்) கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடப்புக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் தற்போதைய நிலவரம், நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணுதல் ஆகியவற்றின் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அரசியலமைப்பின் அடிப்படையில் நாட்டிற்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதே தமது நோக்கம் என்றும் திரு ரணில் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்கள் தன்னாட்சி மேற்கொள்ளும் வகையில் அதிகாரப் பகிர்வுக்கு இந்த சட்டத் திருத்தம் வகைசெய்கிறது.

