கொழும்பு: சிங்கப்பூர் தப்பிச் சென்ற கோத்தபாய ராஜபக்சே, அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது விலகல் கடிதத்தை இலங்கை நாடாளுமன்ற நாயகர் மகிந்த யாப்பா ஏற்றுக்கொண்டதால் நாட்டில் மக்களும் ஆர்ப்பாட்டக்காரர்களும் ஆடி, பாடி மகிழ்ந்தனர்.
'கோத்தா வீட்டுக்குப் போ' என்ற முழக்கத்தோடு பல மாதங்களாகப் போராட்டம் நடத்தியவர்கள் தற்போது வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.
"எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதே போன்ற உணர்வுதான் மற்றவர்களுக்கும் இருக்கும்," என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசிய சமூக ஆர்வலரான விரே பல்தாஸர் தெரிவித்தார்.
சிலர் இனிப்புகளைத் தயாரித்து விநியோகித்து, சுவைத்து மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவர், பாதுகாப்புக்கு நின்று இருந்த காவலருக்கு இனிப்பு கொடுக்க. அவர் புன் சிரிப்புடன் வேண்டாம் என மறுத்துவிட்டார். ராணுவ வீரர்களுக்கும் சிலர் இனிப்பு கொடுத்து கோத்தபாய ராஜபக்சே பதவி விலகலை கொண்டாடினர்.
கோத்தபாய பதவி விலகியதைத் தொடர்ந்து இலங்கையில் ராஜபக்சேக்களின் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து உள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ராஜபக்சே சகோதரர்களின் பிடியில் இலங்கை இருந்தது. ஏற் கெனவே பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேயும் நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சேயும் பதவி விலகிவிட்டனர். இருவரும் இன்னமும் இலங்கையில் உள்ளனர்.

