முதல் குரங்கம்மை சம்பவம்
புதுடெல்லி: இந்தியாவில் முதல் குரங்கம்மை சம்பவம் பதிவாகியுள்ளது. ஐக்கிய அரபு சிற்றரசுகளில் இருந்து கேரளாவுக்கு வந்த நபர் ஒருவருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது ரத்த மாதிரி புனே ஆய்வகத்திற்கு அனுப்பப் பட்டு சோதிக்கப்பட்டதில் அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது என கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் சொன்னார். இதற்கிடையே அவருடன் தொடர்பில் இருந்த 11 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காமராஜருக்கு மோடி புகழாரம்
புதுடெல்லி: முன்னாள் தமிழக முதல்வரான பெருந் தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர். பிரதமர் தமது டுவிட்டர் பதிவில், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காமராஜரின் பங்களிப்பு மறக்க முடியாதது, அவர் கனிவும், அக் கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்கவும் மக்களின் துயரைப் போக்கவும் கடினமாக உழைத்தார், சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தியவர் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சுவர் இடிந்து
விழுந்து ஐவர் உயிரிழப்பு
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள அலிப்பூர் பகுதியில் விற்பனை கிடங்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் நேற்று காலை அந்த கட்டடத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.
10 பேர் மீட்கப்பட்ட நிலையில் அதில் படுகாயம் அடைந்த ஒன்பது பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. கட்டுமான விபத்து குறித்து டெல்லி காவல்துறை விசாரித்து வருகிறது.
விமானத்தில் கோளாறு
புதுடெல்லி: டெல்லியிலிருந்து நேற்று முன்தினம் வதோதரா நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தின் இயந்திரத்தில் அதிர்வு ஏற்பட்டதால் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பிவிடப்பட்டது. இண்டிகோ '6E-859; விமானத்தை இயக்கிய விமானிகள் விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை ஜெய்ப்பூருக்கு திசை திருப்பப்பட்டது. இரவு 8.30 மணியளவில் விமானம் ஜெய்ப்பூர் சென்றடைந்தது. விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். கோளாறு குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் விசாரித்து வருகிறது.

