மத்தியப் பிரதேசத்தில் தடம்புரண்ட ரயில்; யாரும் காயமடையவில்லை
குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த உதய்பூர் விரைவு ரயில் நேற்று முன்தினம் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
உதய்பூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ரயில் தடம்புரண்டதால் அங்கு ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ரயில் சேவை ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக வேறொரு ரயில் அனுப்பிவைக்கப்பட்டது. இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு, உதய்பூர் விரைவு ரயில் இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தது. ரயில் தடம் புரண்டதற்கான காரணத்தை அறிய விசாரணை நடைபெறுகிறது.
நான்கு தட விரைவுச்சாலையை திறந்துவைத்த பிரதமர் மோடி
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 296 கிலோ மீட்டர் நீளமுள்ள புந்தேல்கண்ட் நான்கு தட விரைவுச்சாலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். அந்த விரைவுச்சாலையைக் கட்டி முடிக்க ரூ.14,850 கோடி செலவானது என்று உத்தரப் பிரதேச அரசாங்கம் தெரிவித்தது.
200 கோடி கொவிட்-19 தடுப்பூசி இலக்கை நெருங்கும் இந்தியா
புதுடெல்லி: கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்கொள்ளும் நோக்குடன் இந்தியக் குடிமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளைக் கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்தியா வழங்கி வருகிறது.
இந்நிலையில், நாட்டில் இதுவரை 199 கோடியே 87 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று 22 லட்சத்து 93 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 200 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை இந்தியா அடைய உள்ளதாக இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா-சீனா பேச்சுவார்த்தை
புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. இதற்குத் தீர்வு காண்பதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

