ரவி வெல்லூர்
ஒரு காவல்துறை மோட்டார் சைக்கிள், ஒரு பாதுகாப்பு வாகனம் ஆகியவற்றுடன் ஆடம்பர லிமோசின் கார் இருபது நிமிட தூரத்தில் 18 கி. மீட்டர் தொலைவில் இருந்த ஹோட்டலை நோக்கிச் சென்றது.
ஆடம்பர காரில் பயணம் செய்த கோத்தபாய ராஜபக்சே அங்கிருக்கும் ஹோட்டலில்தான் அன்றைய இரவைக் கழிக்க முன் பதிவு செய்திருந்தார்.
இலங்கை ராணுவத்தின் லெப்டி னெண்ட் கர்னலாக இருந்து அரசியல்வாதியாக மாறிய 73 வயது கோத்தபாயவின் கடைசி அதிபர் பயணம் அது.
நாட்டில் கால் நூற்றாண்டுக்கு மேல் நீடித்த இனப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த அவரை ஒரு காலத்தில் மக்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.
ராணுவப் பின்னணிகளைக் கொண்டவராக இருந்தாலும் வியாழன் இரவு சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த கோத்தபாய தமக்குப் பிடித்தமான வெள்ளைச் சட்டையும் கறுப்பு மேல் சட்டையையும் அணிந்திருந்தார்.
முகத்தில் இருந்த கோடுகள் களைப்பைக் காட்டினாலும் அவரது குரலில் உறுதி தென்பட்டதாக அவரைத் தொலைவில் இருந்து கவனித்தவர்கள் கூறினர்.
'கோட்டா' என்று நாடு முழுவதும் பரவலாக அழைக்கப்பட்ட அவர் ஹோட்டலை அடைந்ததும் நேரத்தை வீணடிக்காமல் தமது பதவி விலகல் கடிதத்தைத் தயார் செய்தார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தக்கடிதம் ஓர் உறையில் வைத்து சீல் இடப்பட்டு அன்று பின்னிரவு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலம் கொழும்பு அனுப்புவதற்காக சாங்கி விமான நிலையத்துக்கு அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டது.
மறுநாள் காலை, அந்தக் கடிதத் தின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டு கோத்தபாய ராஜபக்சே இனியும் 22 மில்லியன் மக்களுக்கு தலைவர் அல்லர் என்று இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அத்துடன் அவரது அதிபர் பதவிகாலம் முடிவுக்கு வந்தது.
திரு கோத்தபாய பதவி விலகினாலும் 'கோட்டா வீட்டுக்குப் போ' என்று முழக்கமிட்டவர்களின் விருப்பம் நிறைவேறவில்லை. அவர் அமெரிக்காவுக்குத் திரும்பிப் போக வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.
ஆனால் திட்டங்கள் இறுதி செய்யப்படும் வரை அல்லது சிங்கப்பூர் விசா இருக்கும் வரை சிங்கப்பூரிலேயே அவர் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவர் தேடியாக ேவண்டும். இலங்கைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் மக்கள் கோபம் தணியும் வரை அவர் வெளிநாட்டில் தங்க வேண்டும்.
இதற்குச் சில காலம் பிடிக்கலாம். முதலில் நாடாளுமன்றம் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது, விரைவில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது, அனைத்துலக பண நிதியம் தலைமையிலான கடன் வழங்கும் நாடுகளுடன் இலங்கை பொருளியலை மீட்டெடுக்கும் பேச்சை புதிய அரசாங்கம் தொடங்க வேண்டும்.
ஆனால் இது, ஒரு பெரிய விவகாரமாக இருக்கக் கூடாது. இலங்கை கடற்பகுதியில் காத்திருக்கும் எண்ணெய்க் கப்பல்களிலிருந்து எரிபொருளை உடனடியாக வாங்க இது பேருதவியாக இருக்கும்.
மூன்றாவது, பற்றாக்குறையால் ஏற்பட்ட கொந்தளிப்பும் மக்களின் கோபமும் ராஜபக்சே கட்சிக்கு இருந்த பெரும்பான்மை ஆதரவை காணாமல் செய்துவிட்டது.
இந்த நிலையில் காலியான கருவூலம் உள்ளிட்ட பல்வேறு இக்கட்டான பிரச்சினைகள் இருந்தாலும் நாட்டில் புதிய தேர்தலை நடத்தியாக வேண்டும். அதன் பிறகே இலங்கையின் புதிய தலைமை யுடன் தான் நாட்டுக்குத் திரும்பு வதற்கான நிபந்தனைகள் குறித்து கோத்தபாய பேச்சு நடத்த முடியும்.
அதுவரை தமது மற்றும் குடும்பத்தின் பாதுகாப்புக்கு அவர் வெளி நாட்டில் தங்குவதே சிறந்தது.
இதற்கு சவூதி அரேபியா, துபாய், ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை பொருளியலைத் தவறாகக் கையாண்டதால் கோத்தபாய ராஜபக்சேயின் அரசியல் வாழ்வு முற்று பெற்றுள்ளது.
ஆனால் 2005ல் அவரது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே அதிபரான பிறகு அவர் ஏற்றுக்கொண்ட தற்காப்பு அமைச்சர் பொறுப்பே அவரை புதிய உச்சத்திற்கு இட்டுச் சென்றது.
2006 முற்பகுதியில் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காகவே அவர் அமெரிக்காவிலிந்து நாடு திரும்பினார். அப்போது, தான் வாங்க விரும்பிய அதிக விலை உயர்ந்த போர் ஆயுதங்களின் நீண்ட பட்டியலைத் தயாரித்து அவர் சமர்ப்பித்தார். இந்தப் பட்டியலைக் கண்டு அவரது சகோதரர் உட்பட பலரும் திகைப்படைந்தனர்.
அதற்கு கோத்தபாயா அளித்த பதில் எளிமையானது: "நீங்கள் அனைவரும் விடுதலைப் புலிகளுடன் அமைதி பேச்சை நம்பிக்கையோடு தொடங்குவீர்கள். ஆனால் அது வீண் என்பது தெரியும்போது என்னிடம் வருவீர்கள். அந்தத் தருணம் வரை நான் காத்திருக்க முடியாது. நான் முழுமையாக தயாராக இருக்க எனக்கு அனைத்து ஆயுதங்களும் தேவை," என்று அவர் தெளிவாகக் கூறினார்.
அதன் பிறகு கொடூரமான போர்க்களத்தில் ஈழப்புலிகளை வெற்றி பெறுவதற்காக அப்போதைய ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா உள்ளிட்டவர்களுடன் அவர் நெருக்கமாகச் செயல்பட்டார். இதையடுத்து 2009ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மூன்றே ஆண்டுகளில் இனப்போர் முடிவுக்கு வந்தது.
ஆனால் ராஜபக்சேக்கள் அதன்பிறகு மிதமிஞ்சி செயல்பட்டனர். ஜெனரல் ஃபொன்சேகா தேசிய கதாநாயகர் என்ற தகுதிக்கு உயர்ந்ததால் அவர் அரசியல் எதிரி யாக உருவாகிவிடுவாரோ என்று எண்ணி அவரை ராஜபக்சே சகோ தரர்கள் ஓரங்கட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை சிறையில் அடைத்தனர்.
கடந்த 2010 பிப்ரவரியில் ஜெனரல் ஃபொன்சேகா தடுத்து வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் இந்த நடவடிக்கை எதற்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து தொலைேபசி அழைப்பு ஒன்றில் திரு ராஜபக்சே என்னிடம் விளக்கினார்.
தங்களுடைய ஆட்சியை ஜெனரல் கவிழ்க்க முயற்சி செய்வதாக அப்போது அவர் குற்றம்சாட்டினார்.
அதில் அவர் வெற்றி பெற்றால் மறைந்த சிறிமாவோ பண்டாரநாயகாவுக்கு மறைந்த ஜூனியஸ் ஜெயவர்தனே செய்ததைவிட மோசமானதை சகோதரர்களுக்கு செய்திருப்பார் என்றும் அவர் கூறினார்.
திரு ஜெயவர்த்தனே காலத்தில்தான் திருமதி பண்டாரநாயகாவின் குடியுரிமை பறிக்கப்பட்டது.
2015ல் ஆட்சி கவிழும் வரை அதிபர் மஹிந்த தலைமையிலான ராஜபக்சேயின் குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் ஓங்கியிருந்தனர்.
ஆனால் சீனாவுடன் நெருக்கமாக அவர்களுடைய ஆட்சி செயல்படத் தொடங்கியதால் கவலையடைந்த மேற்கத்திய, இந்திய புலனாய்வுத் துறையினர் ஆட்சியை கவிழ வைத்தனர்.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய அரசாங்கத்துக்கு அளித்து வந்த ஆதரவை ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி விலக்கிக் கொண்டதால் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமர் ஆனார். அப்போது மைத்ரிபால சிறிசேன அதிபராக இருந்தார்.
அந்தச் சமயத்தில் பிரதமர் பதவி யிலிருந்து நீக்கப்பட்ட அணில் விக்ரமசிங்க, தமது பதவிநீக்கம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
ராஜபக்சே குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்று இலங்கை மக்களால் இன்று குற்றம்சாட்டும் அந்த ரணில் விக்கிரம சிங்கதான் தற்போது இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2019 ஏப்ரலில் கொழும்பில் நடந்த ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு அதிபர் சிறிசேனா அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
அரசாங்கத்துக்கு ஆபத்து இருப்பதாக முன்கூட்டியே இந்திய உளவுத்துறை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் சிறிசேனா-விக்கிரமசிங்கே மோதலில் ஒழுங்கற்ற நிர்வாகம் அதனை கவனிக்கத் தவறிவிட்டது.
மேலும் தேவாலயம் மற்றும் ஹோட்டல்களில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்களில் ஏறக்குறைய 270 பேர் கொல்லப்பட்டனர். நாடே அதிர்ச்சியடைந்து ஊடுருவல், வன்முறை அச்சத்தில் மூழ்கியது.
அந்த அச்சத்தால் ஒரு வலிமையான நபரை இலங்கை மக்கள் தேடினர். அந்த வலிமையை ராஜபக்சேயிடம் அவர்கள் கண்டனர்.
இதையடுத்து 2019 பிற்பகுதியில் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் ராஜபக்சே அதிபரானார்.
உடனே அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் தமது குடும்பத்தினரை அவர் நியமித்தார். வெளியுறவு துறையில் ராணுவத்தைச் சேர்ந்த நம்பிக்கையானவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டன.
அப்போதிலிருந்து பொதுமக்களின் கோபத்தால் தப்பி ஓடிய தற்போதைய அவலநிலை வரை எல்லாமே மூன்று ஆண்டுகளில் நடந்து விட்டது.
விவசாய உற்பத்தியை வீழ்ச்சியடைய வைத்த ரசாயன உரங்கள் மீதான தடை போன்ற குழப்பமான கொள்கைகள், கொவிட்-19 தொற்றுநோயின் தொடக்கம், சுற்றுலாத் துறையின் வீழ்ச்சி போன்ற அனைத்தும் அந்நிய செலாவணி நெருக்கடியை ஏற்படுத்தி கருவூலத்தைக் காலி செய்து ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தியிருக்கிறது.
அவர், மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமில்ைல. இலங்கையின் மோசமான அரசியல் பிளவுகள் ஏற்பட்டு இறுதியில் ஒரு வலிமையான ஆளை மக்கள் மீண்டும் தேடினாலும் அது கோட்டாவாக இருக்காது. அதே சமயத்தில் லட்சியமிக்க அவரது சகோதரர் மஹிந்தாவின் மகன் அந்த நபராக இருக்கலாம்.
- ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில் வெளியான கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

