லக்னோ: தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர இலவசத் திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது என்றும் இலவசத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எனவே இலவசங்கள் குறித்து மக்கள், குறிப்பாக இளையர்கள் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும் என்றும் உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நான்கு வழி விரைவுச் சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் பேசியபோது அவர் அறிவுறுத்தினார்.
"இலவச கலாசாரத்தால் புதிய விரைவுச் சாலைகள், புதிய விமான நிலையங்களை உருவாக்க முடியாது. இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்க முடியும் என்று சிலர் கருதுகின்றனர். இது தவறான போக்கு.
"இந்த மோசமான கலாசாரத்தை மக்கள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவசத் திட்ட கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும்," என்றார் பிரதமர் மோடி.
இலவசத் திட்டங்கள் என்ற குறுக்கு வழியை பாஜக பின்பற்றவில்லை என்று குறிப்பிட்ட அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசு இலவசத் திட்டங்களை தவிர்த்து நாட்டின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்துகிறது என்றார்.
"புதிய சாலைகளை அமைப்பதன் மூலமாக, புதிய ரயில் பாதைகளை உருவாக்குவதன் வழியாக மக்களின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் அயராது பாடுபடுகிறோம்.
"நாங்கள் நிகழ்காலத்துக்கான வசதிகளை மட்டுமே ஏற்படுத்தவில்லை. நாட்டின் எதிர்காலத்துக்காகவும் பலவற்றைக் கட்டமைத்து வருகிறோம்," என்றார் பிரதமர் மோடி.
இலவச கலாசாரத்தின் மூலம் சாதாரண மனிதர்களின் வாக்குகளை வாங்கிவிட முடியும் என சிலர் நினைப்பதாகக் குறிப்பிட்ட அவர், அது தவறு என்பதை உணர்த்த வேண்டும் என்றார்.
"நாட்டின் வளர்ச்சிப்பாதை இப்போது அதன் மையத்தில் நோக்கம், மரியாதை ஆகிய இரண்டு அம்சங்களை முன்வைத்து நகர்கிறது
"ஒரு காலத்தில் டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது குக்கிராமங்கள் வரை வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நகரங்கள், கிராமங்கள் சரிசமமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன என்பதைப் பார்க்கிறோம்," என்றார் பிரதமர் மோடி.
'இளையர்கள் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும்'

