செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0275c6c2-41bd-457a-b8ca-ee9a18ba36fb
-

அமர்நாத் யாத்திரை: 50 பேர் மரணம்

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை தொடங்கி 17 நாள்கள் ஆன நிலையில் 50 பக்தர்கள் பலியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் 30ஆம் முதல் நேற்று முன்தினம் வரை ஜம்மு காஷ்மீரில் உள்ள பனி லிங்கத்தை சுமார் 160,000 பேர் தரிசித்துள்ளனர். எனினும் உடல்நிலை பாதிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 35 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 15 பக்தர்கள், கடந்த 8ஆம் தேதி, மேக வெடிப்பு காரணமாக அமர்நாத் பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

15 வயதுச் சிறுமியை சீரழித்து அமிலம் குடிக்க வைத்த ஆடவர் கைது

புதுடெல்லி: பதினைந்து வயதேயான சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதுடன், சிறுமியின் வாயில் அமிலம் ஊற்றி குடிக்கச் செய்த 31 வயதான ஆடவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. அச்சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெய் பிரகாஷ் என்ற அந்த கொடூர மனம் கொண்ட ஆடவர் டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் மேலாளராக உள்ளார். அதே தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 15 வயதுச் சிறுமியிடம், தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உதவிக்கு வருமாறும் கூறி, சில தினங்களுக்கு முன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் தன் வீட்டில் வைத்து சிறுமியை சீரழித்துள்ளார். அமிலம் குடித்த சிறுமி வீட்டில் மயக்கமடைந்ததை அடுத்து, அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

‌வேலையின்மை விகிதம் குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.3% ஆகக் குறைந்துள்ளது என இந்திய பொருளாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொரோனாவிற்கு முன்பு 2019ஆம் ஆண்டு பட்டதாரிகள் இடையே வேலையின்மை விகிதம் 14.9% ஆக இருந்தது என்றும் 2020ல் அது 15.1% ஆக அதிகரித்தது என்றும் குறிப்பிட்டுள்ள அம்மையம், 2021ல் இந்த விகிதம் 19.3% ஆக உச்சத்தை தொட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜூலை 15ஆம் தேதி நிலவரப்படி வேலையின்மை விகிதம் 7.3% ஆகக் குறைந்துள்ளதாக அந்த ஆய்வு மையம் மேலும் கூறியுள்ளது.

கறுப்புக் காய்ச்சலால் 65 பேர் பாதிப்பு

கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் கறுப்புக் காய்ச்சலால் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு டார்ஜிலிங், மால்டா, உத்தர் தினஜ்பூர், தக்ஷின் தினஜ்பூர் ஆகிய பகுதிகளில் அதிகமானோருக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதையடுத்து காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.