ரணிலுக்கு எதிராகப் பேரணி
கொழும்பு: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேரணி நடைபெற்றது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் தொடங்கி, காலி முகத்திடல் வரை இந்தப் பேரணி நீண்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். 'நாங்கள் விரட்டும் முன்னர் செல் ரணில்' என்பன உள்ளிட்ட கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் கையில் ஏந்தி இருந்தனர். இலங்கையில் மக்கள் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைகிறது.
இந்திய விமான நிறுவனங்களுக்கான விதிமுறைகள் கடுமையானது
புதுடெல்லி: அண்மைக்காலமாக பல்வேறு விமானச் சேவைகளில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து, விமான நிறுவனங்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம். இதையடுத்து, ஒரு விமானம், புறப்படுவதற்கு முன் ஊழியர்களால் சான்றளிக்கப்பட்ட பின்னரே இயக்கப்பட வேண்டும் என்றும், இதற்கென தொழில்நுட்ப வல்லுநர், பொறியியலாளர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிதிவண்டியின் விலை ரூ.70,000
கொழும்பு: இலங்கையில் மிதிவண்டிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல் கிடைக்காமல் அவதியுறும் மக்கள் மிதிவண்டிகளைப் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் மிதிவண்டிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் நீடிக்கிறது. இதனால் வேலைக்குச் செல்பவர்கள் மிதிவண்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் சாதாரண மிதிவண்டியின் விலை 70 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் அடுத்த திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு
கொழும்பு: இலங்கையில் அடுத்த திங்கட்கிழமை முதல் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 24ஆம் தேதி வரை பள்ளிகளுக்கான விடுமுறை நீடிக்கும் என கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது. இது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது என்றும் அதில் கல்வி அமைச்சின் உயரதிகாரிகள், தேசிய கல்வி மையத்தின் இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனைத்துப் பள்ளிகளும் 21ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனினும் பல மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல போக்குவரத்து வசதி இல்லை என்கின்றனர்.

