புதுடெல்லி: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த நூபுர் சர்மாவை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கைது செய்ய வேண்டாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நூபுர் சர்மாவுக்கு எதிரான பல்வேறு முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைக்கக் கோரும் மனுவுக்கு மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநிலங்களும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட விவகாரத்தில் நூபுர் சர்மா மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவாகி உ ள்ளன.
அவை அனைத்தையும் ஒரே விவகாரமாகக் கருதி விசாரிக்க உத்தரவிடக் கோரி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளரான நூபுர் சர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்கும்வரை நூபுர் சர்மாவைக் கைது செய்வதைத் தவிர்க்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, தன்னைப் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கடுமையான கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நூபுர் சர்மா தமது மற்றொரு மனுவில் கோரியுள்ளார்.

