புதுடெல்லி: கொரோனாவால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பாதிப்பால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை ஆந்திர மாநில அரசு தனது வறட்சி நிவாரண திட்டத்துக்கு மாற்றியதாக அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பும் கிளம்பியது.
ஆந்திர அரசின் இம்முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்தபோது, ஆந்திர அரசு சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் ஆர்.வசந்த், 'கொரோனாவால் இறந்த நான்கு குடும்பங்களுக்கு வழங்கப்படாமல் இருந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்தத் தகவலை பதிவு செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
அதேசமயம் கொரோனா நிவாரணத்தொகை வறட்சி நிதிக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் அதனை இரு தினங்களுக்குள் பேரிடர் மேலாண்மை நிதிக்கு ஆந்திர அரசு மாற்ற வேண்டும் என்றும் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பின்படி, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

