காதல் சின்னத்தின் கட்டணச் சாதனை
ஆக்ரா: இந்தியாவில் தொடர்ந்து ஆக அதிக வருவாய் ஈட்டும் நினைவுச் சின்னமாக விளங்குகிறது தாஜ்மகால்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிலையம் இதன் நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் 132 கோடி ரூபாய் (23 மில்லியன் வெள்ளிக்கும் மேல்) ஈட்டியதாகக் கூறியுள்ளது. நிலையம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கான நுழைவுச் சீட்டு விற்பனை மூலம் ஈட்டும் மொத்த வருவாயில் இது ஏறக்குறைய 24 விழுக்காடு.
இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிலையம் நாடு முழுவதும் நிர்வகித்து, பாதுகாக்கும் 3,693 வரலாற்றுத் தலங்களில் 143க்கு மட்டும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறது.
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் கற்கள் உருண்டு விழுந்தன. இதனையடுத்து ஸ்ரீநகர் நெடுஞ்சாலை சில மணி நேரம் மூடப்பட்டது.
காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த முக்கியச் சாலை இணைப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்பட்டதாகப் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்தது.
அரசுப் பேருந்தில் திடீர்ச் சோதனை;
ரூ. 5.7 லட்சம் அபராதம் வசூல்
பெங்களூரு: கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சென்ற மாதம் தங்கள் பேருந்துகளில் திடீர்ச் சோதனை நடத்தினர்.
மொத்தம் 46,813 பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டதில், 3,482 பேருந்து நடத்துநர்கள் பயணச்சீட்டு மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட நான்காயிரம் பயணிகள் பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு ஐந்து லட்சத்து எழுபதாயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.
ஆற்று வெள்ளத்தில் மூவர் பலி
திருப்பதி: ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சிக்கிய மூன்று பேரின் சடலங்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
தொடர்ந்து கனத்த மழை பெய்வதால் ஒரு வாரத்துக்கும் மேலாக குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மீட்புப் பணிகளில் 120 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

