புதுடெல்லி: நாட்டில் சென்ற ஆண்டு வங்கி மோசடிகள் ஏறத்தாழ 50 விழுக்காடு குறைந்ததாக மத்திய நிதித் துணையமைச்சர் பாகவத் கராட் தெரிவித்துள்ளார்.
வங்கி மோசடி தொடர்பில் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. எழுத்துபூர்வமாக அதற்குப் பதிலளித்த துணையமைச்சர் இவ்வாறு கூறினார்.
இந்தியாவில், 2020-2021 நிதியாண்டில் பதிவான வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 4,680. சென்ற நிதியாண்டில் இது 2,369ஆகக் குறைந்தது என்றார் அவர். மோசடி செய்யப்பட்ட தொகையும் குறைந்ததை துணையமைச்சர் சுட்டினார். சென்ற நிதியாண்டில் 3,204 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நிதியாண்டில் 7,306 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது என்றார் அவர்.
வங்கி மோசடிகளைக் கையாள மேம்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.

