கொழும்பு: சீனாவிடம் இருந்து அதிக அளவில் கடன் வாங்கியதன் காரணமாக இலங்கையின் பொருளியல் பெரும் சரிவைக் கண்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கதி, மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக அமையும் என்று அம்முகமையின் தலைவர் பில் பெர்ன்ஸ் கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.
"தாங்கள் முதலீடுகளைச் செய்வதற்காக கவர்ச்சிகரமான காரணங்களை சீனா முன்வைக்கும். ஆனால் இலங்கை இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை மற்ற நாடுகள் பார்க்க வேண்டும். சீனாவிடம் வெகுவாகக் கடன்பட்டுள்ளது இலங்கை.
"எதிர்கால பொருளியல் தொடர்பான முட்டாள்தனமான பந்தயங்களில் ஈடுபட்டதால் இன்று அரசியல், பொருளியல் ரீதியில் பேரழிவைச் சந்தித்துள்ளது இலங்கை," என்று பில் பெர்ன்ஸ் மேலும் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கு அல்லது தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலக நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, ஹம்பன்தோட்டா துறைமுக கட்டுமானத்துக்காக சீனாவிடம் பெற்ற 1.4 பில்லியன் டாலர் கடனை இலங்கையால் அடைக்க முடியவில்லை. இதையடுத்து சீன நிறுவனம் ஒன்றுக்கு அந்தத் துறைமுகத்தை 99 ஆண்டுகால குத்தகைக்கு அளித்துள்ளது இலங்கை.

