புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், அஜய் மாக்கான் உட்பட 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதாகினர்.
மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், சச்சின் பைலட், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக ஆட்சியில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேஷனல் ஹெரால்ட் பண மோசடி வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது. அண்மையில்தான் கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளாகப் பங்கேற்க வேண்டும் என கட்சித் தலைமையகம் கேட்டுக்கொண்டதை அடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், மகளிர், இளையர், மாணவர் பிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கட்சி தலைமையகம் முன்பு திரண்டனர்.
பின்னர் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அமலாக்கத்துறையின் மூலம் மத்திய அரசு சோனியா காந்தியை மிரட்டுவதாக முழக்கங்களில் குறிப்பிட்டனர்.
பின்னர் அனைவரும் அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டபோது, காவல்துறையால் தடுக்கப்பட்டனர்.
மேலும், அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது. அப்போதும் கலைந்து போகாமல் முன்னேறிச் சென்றவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, சுமார் இரண்டரை மணி நேரத்துக்கு நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
அவரது வேண்டுகோளின் பேரிலேயே நேற்றைய விசாரணை முன்கூட்டியே முடித்துக்கொள்ளப் பட்டதாகத் தெரிகிறது.

