இலங்கை: ரயில் கட்டணங்கள் உயர்வு
கொழும்பு: இலங்கையில் இன்று முதல் ரயில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. நேற்று நள்ளிரவு முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாக இலங்கை ரயில்வே பொது மேலாளர் தம்மிக்கா ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். ஓரிடத்துக்குப் பேருந்து மூலம் செல்வதற்கு விதிக்கப்படும் கட்டணத்தில் பாதி அளவுக்கு ரயில் கட்டணங்கள் உயர்த்தப் படுவதாக அவர் கூறினார். மேலும், எரிபொருள் விலையேற்றம் காரணமாக ரயில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இயலாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நூபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்த இளையர் மீது தாக்குதல்: இருவர் கைது
போபால்: பாஜக முன்னாள் நிர்வாகி நூபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்தவர், மத்தியப் பிரதேசத்தில் தாக்கப்பட்டுள் ளார். ஆயுஷ் ஜாதம் என்ற அந்த 25 வயதான ஆடவர் நேற்று முன்தினம் தமது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தபோது அடையாளம் தெரியாத சிலரால் தாக்குதலுக்கு ஆளானார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், புகாரின் பேரில் தாக்குதலில் தொடர்புடைய 13 பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல்
ஜெய்ப்பூர்: 'கோ பர்ஸ்ட்' என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதன் கண்ணாடியில் திடீர் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. முன்னதாக அந்த விமானம் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்தி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதற்கு முன்பு 'கோ பர்ஸ்ட்' நிறுவனத்தின் ஒரு விமானம் மும்பையில் இருந்து காஷ்மீரின் லே பகுதிக்குச் சென்றபோது அதன் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. பின்னர் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திலும் இரண்டாவது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அந்த விமானம் ஸ்ரீநகருக்கே திரும்பியது.
அதிபர் பதவியேற்பு நிகழ்வின்போது மின்தடை: விசாரணைக்கு உத்தரவு
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் பதவியேற்பு நிகழ்வின்போது நாடாளுமன்ற வளாகத்தில் திடீர் மின்தடை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பதவியேற்பு நிகழ்வின் தொலைக்காட்சி நேரலை தடைபட்டது. இதுகுறித்து விசாரிக்கும் பொறுப்பு இலங்கையின் சிஐடி பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

