நாகப்பாம்பு நடு சாமத்தில் முதியவர் ஒருவர் மீது ஏறி இறங்கி உரசி விளையாண்டு சட்டையை உரிக்கிறது என்று எனக்குப் பழக்கமான ஒருவர் தெரிவித்ததை அடுத்து அவரிடமிருந்து முகவரியை வாங்கிக்கொண்டு மயிலாடுதுறை அருகே இருக்கும் வேப்பங்குளம் என்ற கிராமத்துக்கு விரைந்தேன்.
அந்தக் கிராமத்துக்குள் நுழைவதற்கு முன்னதாகவே சாலை ஓரமாக வித்தியாசமாக ஒரு வழிபாட்டு இடம் தென்படவே, வண்டியை நிறுத்திவிட்டு கீழிறங்கி நின்றேன்.
பக்கத்தில், ஓர் ஆள் மட்டும் குனிந்து உள்ளே சென்று வெளியே வரும் அளவுக்கு ஒரு சிறிய குடிசை இருந்தது. அதன் உள்ளே இருந்து 'அய்யா இதோ வந்துவிடுகிறேன்' என்று ஒரு குரல் கேட்டது. சத்தம் வந்த குடில் பக்கம் பார்வையைத் திருப்பினேன். இந்தச் சடாமுடி முதியவர் வெளியே வந்தார்.
"என் தாய், தந்தை, பாட்டன், பாட்டி எல்லாருமே இதே இடத்தில்தான், சாலை ஓர குடிசையில்தான் வசித்து வந்தோம்.
"26 ஆண்டுகளுக்கு முன் வைகாசி மாதம் கடைசி சனிக்கிழமை பின்னிரவு சுமார் 3 மணிக்கு ஒரு கனவு கண்டேன். 10 வயது சிறுமி, ஏராளமான நகைகளுடன் தரையைத் தொடும் அளவுக்கு தலைமுடியுடன் இருந்ததைப் பார்த்து திடுக்கிட்டு, என்ன வேண்டுமென்று கேட்டேன்.
"தரையைப் பார்க்கும்படி அந்தச் சிறுமி சொல்ல, கீழே பார்த்த நான் திடுக்கிட்டேன். ஒரு பெரிய குழியில் ஐந்து தலை நாகத்தைப் பார்த்து பயந்துவிட்டேன்.
"சில மாதங்களுக்குப் பிறகு இந்த இடத்தில் இந்தப் புற்று அதுவாகவே கொஞ்சம் கொஞ்சமாக மேலே கிளம்பி வந்தது.
"அதுவரை, விவசாய வேலையை நாள் கூலிக்கு செய்துகொண்டிருந்த எனது கவனம் பாம்பு மீது திரும்பியது. பாம்புப் புற்றைப் பராமரிக்கத் தொடங்கினேன். பாம்பை வழிபடத் தொடங்கினேன்.
"அதற்குள்ளாக எனது ஒரே மகன் வேல்முருகன், அபிராமி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துவிட்டான்.
"அவனுக்கு நாகலெட்சுமி, ஆர்த்தி என்ற இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு. என் மனைவி கோவிந்தம்மா என் மகனுடன் வசிக்கிறாள். இப்போது இங்கு நான் மட்டும்தான் பாம்புத் துணையுடன் வாழ்கிறேன். இந்தத் தரையில்தான் எப்போதுமே தூங்குவேன்," என்று கூறிய திரு கிருஷ்ணமூர்த்தி என்ற இந்த 75 வயது பெரியவர், அருகே ஒரு சிமெண்ட் தரையைக் காட்டி னார். அது பெரிய பாம்புப் புற்றுடன் சேர்ந்து இருந்தது.
"நடு இரவில் ஒரு மணிக்குப் பிறகு 2.30 மணிக்குள் நான் படுக்கும் இடத்திற்கு நாகப்பாம்பு வரும்.
"பாம்பை நான் நாகம்மா, பாலநாகம்மா என்றுதான் அழைப்பேன். என் உறக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு என் மீது ஏறி இறங்கி என் உடலுடன் தன் உடலை உரசி பாம்பு விளையாடும்.
"அமாவாசை, பவுர்ணமி இரவில் என் உடம்பின் மீது உரசி பாம்பு சட்டையை உரிக்கும். தூக்கத்தைக் கெடுக்காதே என்று நான் சத்தம் போடுவேன். அது என் உடலை விட்டு கீழே இறங்கி புற்றுக்குள் போய்விடும்.
"நான் சொல்வதை நம்புங்கள். அதைவிட நல்லபாம்பை நம்புங்கள்.
"பவுர்ணமி அல்லது அமாவாசையன்று இதே இடத்துக்கு பின்னிரவு நேரத்தில் வாருங்கள். நிச்சயமாக என்னுடன் நீங்கள் இதே தரையில் பாம்பைப் பார்க்கலாம்," என்று திரு கிருஷ்ணமூர்த்தி கூறியதைக் கேட்டு கொஞ்சம் பயந்துவிட்டேன்.
அதற்குள்ளாக அந்த வழியே வந்தவர்கள், போனவர்கள் பலரும் கிருஷ்ணமூர்த்தியை நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்கள்.
கிருஷ்ணமூர்த்தியிடம் பாம்பு சட்டை எப்படி இருக்கும் என்று கேட்டேன். அவர் இந்தப் புற்று இருக்கும் இடத்திற்குப் பின்புறம் சென்று பெரிய புடவை அளவுக்கு மஞ்சள் துணியை எடுத்து வந்தார். அதன் நடு நடுவே முடிச்சு முடிச்சாக இருந்தது. அவர் பைகளிலும் சிறுசிறு துணியிலும் எதையோ முடிந்து வைத்திருக்கிறார்.
ஒரு முடிச்சை அவிழ்த்துக் காட்டினார். அதன் உள்ளே பாம்புச் சட்டையைப் (தோல்) பார்த்தேன்.
"நாகதோஷம் உள்ளவர்கள் அந்த தோஷத்தைக் கழிக்க என்னிடம் வந்து இந்தச் சட்டையை (தோலை) நன்கொடையாக பணம் கொடுத்து வாங்கிச் செல்வார்கள்.
"இதை கையிலோ தலையிலோ சுமந்து ஏதாவதொரு கோயிலுக்குச் சென்று நாகத்தை வழிபட்டால் தோஷம் போய்விடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இப்படியாகத்தான் என் காலம் ஓடுகிறது," என்றார் திரு கிருஷ்ணமூர்த்தி.
கிருஷ்ணமூர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக நீட்டித்து கட்டி உள்ள பாலநாகம்மா வழிபாட்டிடத்தில் பல விநோதங்கள் தென்பட்டன.
புற்றுக்கு இடது புறம் ஐந்து விதமான மரங்கள் சேர்ந்து பின்னிப் பிணைந்து வளர்கின்றன. அதை எனக்குக் காட்டிய திரு கிருஷ்ணமூர்த்தி, இது ஆலமரம், இது அரசமரம், இதுதான் வேப்ப மரம், நடுவே உள்ளது பனைமரம், கீழே வளர்வது நுணாமரம் என்று விளக்கினார்.
"நுணா மரத்தைப் பார்த்தீர்களே, அது பாம்பு போலவே வளர்வதைக் கவனித்தீர்களா," என அந்த முதிய வர் கேட்டதைக் கேட்டு நானும் அதை உற்றுப் பார்த்தேன்.
"நான் தீவிர பாம்பு பக்தனாக மாறியது முதலே சடாமுடியாக மாறிவிட்டேன். நாகத்திடம் நச்சு உண்டு என்றாலும் அதை நல்லபாம்பு என்று சொல்வதற்குக் காரணம் அந்தப் பாம்பு யாருக்கும் அதுவாகக் கெடுதல் செய்யாது.
"இதை என் அனுபவத்தில் நான் கண்கூடாகக் கண்டு வருகிறேன். எந்தவொரு நாகமும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் தான் ஒருவரைக் கடிக்கும்.
"பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். பாம்பு கடித்தால் உயிர்போய் விடும். ஆனால் என்னைப் பொறுத்தவரை என் உயிரும் உடலுமாக இருந்து, துணையாக என்னை காத்து வருவது என் நாகம்மாதான்," என்று திரு கிருஷ்ணமூர்த்தி கூறியபோது அவர் உணர்ச்சிவசப்பட்டு மெய்மறந்த நிலையில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது.
வேப்பங்குளம் பாம்புப் புற்றை கிருஷ்ணமூர்த்தி துணையுடன் அருகே சென்று உற்றுப் பார்த்தேன்.
பாம்பு நினைவுடனே இருந்த எனக்கு அங்கு எதைப் பார்த்தாலும் பாம்பு ஊர்வதைப் போலவே தெரிந்ததால் பயந்துவிட்டேன்.
இரவு நேரத்தில் வாருங்கள் என்று திரு கிருஷ்ணமூர்த்தி கூறியது அப்போது என் நினைவுக்கு வந்தது. பயம்தான் அதிக மானது. அடுத்தடுத்து அமாவாசை, பவுர்ணமி வரும் போகும். ஆனால் துணிச்சல் வருமா என்பதுதான் சந்தேகம். உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், நீங்கள் தயார் என்றால் வேப்பங்குளம் போய் பாருங்கள்.

