செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
97f21e9d-5d43-479b-8797-42b361a6e670
-

வீடுகளில் கொடி: மோடி அழைப்பு

புதுடெல்லி: இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடுகிறது.

இந்நிலையில், சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

94 யூடியூப் ஒளிவழிகளுக்கு தடை

புதுடெல்லி: இந்தியாவில் 2021-22ஆம் ஆண்டில் போலிச் செய்திகளைப் பரப்பியதற்காக 94 யூடியூப் ஒளிவழிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. 19 சமூகவலைத் தளங்களும் 747 யூஆர்எல்களும் தடை செய்யப்பட்டுள்ள தாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

US$87 பில்லியன் வந்தது

புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனம், வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் தாய்நாட்டுக்கு அனுப்பும் பணம் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் இந்தியர்கள், 2021ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவுக்கு US$87 பில்லியன் (ரூ.6.9 லட்சம் கோடி) அனுப்பி இருக்கிறார்கள். இந்திய ஊழியர்கள் அனுப்பும் வெளிநாட்டுப் பண வரவில் சீனா, மெக்சிகோவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது.

'வருணா' அறிமுகம்

புதுடெல்லி: பயணியுடன் வானில் பறக்கும் முதல் வானூர்தியை (டுரோன்) தன் கப்பற்படைக்காக இந்தியா தயாரித்துள்ளது. 'வருணா' என்ற அந்தக் கண்டுபிடிப்பைப் பார்வையிட்டு அதை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 18ஆம் தேதி தொடங்கி வைத்தார். வருணா, ஒரு பயணியுடன் வானில் பறந்து பிரச்சினையின்றி தரை இறங்கியதை பிரதமர் பார்த்து மிகவும் பாராட்டினார்.

வெங்காயம் விரயத்தை தடுக்க...

புதுடெல்லி: இந்தியாவில் வெங்காயம் விரயமாவதைத் தடுப்பதற்காக மத்திய அரசாங்கம் 'பெரும் சவால்' என்ற போட்டியை ஜூலை 10ஆம் தேதி தொடங்கியது.

அதில் மாணவர்கள், ஆய்வாளர்கள், புதிய நிறுவனங்கள் கலந்துகொண்டு அரசாங்க நிதியுதவியுடன் ஆய்வுகளை நடத்தி புதிய தீர்வுகளை முன்வைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் கெஜ்ரிவாலுக்குத் தடை

புதுடெல்லி: சிங்கப்பூரில் ஆகஸ்ட் 2, 3ஆம் தேதிகளில் நடக்கும் 'உலக நகரங்கள்' மாநாட்டில் 'டெல்லி முன்மாதிரி' என்ற தலைப்பில் உரையாற்ற புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ சிங்கப்பூர் பயணத்துக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி மறுத்துவிட்டார். இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சை கெஜ்ரிவால் நாடி உள்ளார்.