புதுடெல்லி: இந்திய அதிபர் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக திரெளபதி முர்மு, எதிர்க்கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் திரெளபதி முர்மு 676,803 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 380,177 வாக்குகள் கிடைத்தன. 64%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற திரெளபதி முர்மு 15வது அதிபரானார்.
இந்தியாவில் அதிபராகும் 2வது பெண் திரெளபதி முர்மு. இந்தியாவில் அதிபர் பதவியில் அமரும் முதல் பழங்குடி இனத்தவரும் திரெளபதி முர்முதான்.
இதனிடையே, முர்மு பெற்றிருக்கும் அதிகப்படியான வாக்குகளைக் கணக்கிட்டுப் பார்க்கையில், 18 மாநிலங்களைச் சேர்ந்த 126 எம்எல்ஏக்கள் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி கோட்பாட்டு அடிப்படையில் அவருக்கு வாக்கு அளித்துள்ளது தெரிய வருகிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 22 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளனர். அந்த மாநிலத்தில் பழங்குடி மக்கள் அதிகம்.
அதேபோல் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மத்தியப் பிரதேசத்தில் 19 எம்எல்ஏக்கள், கட்சியைப் பாராமல் வாக்கு போட்டுள்ளனர்.
இப்போதைய அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய அதிபர் தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடந்தது.
அதிபர் தேர்தலில் முர்மு பெற்றுள்ள வாக்குகளைப் பார்க்கை யில், எம்பிக்கள், எம்எல்ஏக்களில் பலரும் கட்சியைவிட கோட்பாட்டு ரீதியில் செயல்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
எதிர்த்தரப்பு சார்பில் களம் இறங்கிய யஷ்வந்த் சின்ஹா, அவரின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட்டில் 81 வாக்குகளில் வெறும் 8 வாக்குகளையே பெற்றுள்ளார்.
அதேவேளையில், முர்மு தனது சொந்த மாநிலமான ஒடிசாவில் 147 வாக்குகளில் 137 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்திய அதிபராக பழங்குடி இன முர்மு 676,803 வாக்குகள் பெற்று அமோக வெற்றி

