திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரத்தில் செயல்படும் ஒரு பொறியியல் கல்லூரி அருகே உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நடுவே தடுப்பு இல்லாத நீண்ட இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.
அதில் மாணவ, மாணவிகள் உரசிக்கொண்டு உட்காருகிறார்கள் என்பதால் நீண்ட இருக்கையைத் துண்டு துண்டாக தனித்தனி நாற்காலியாக யாரோ மாற்றிவிட்டனர்.
இதை ஆட்சேபித்து அந்தப் பொறியியல் கல்லூரி மாணவிகளும் மாணவர்களும் பேருந்து நிறுத்தத்தில் இருந்த தனித்தனி நாற்காலிகளில் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்து புதிய வகை போராட்டத்தை நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தைக் காட்டும் காணொளிகளும் படங்களும் சமூக ஊடகங்களில் காட்டுத் தீ போல் பரவின.
இதனையடுத்து அந்த நகரின் மேயர் ஆரியா ராஜேந்திரன் சம்பவ இடத்திற்குச் சென்றார். மாநகராட்சி நிர்வாகம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவான இருக்கைகளை அமைக்கும் என்று மாணவர்களிடம் அவர் உறுதியளித்தார்.
இதனிடையே, மடியில் அமரும் வினோத ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள், சமூக ஊடகத்தில் காணொளிகள், படங்கள் பரவியது பற்றி வருந்தினர். என்றாலும் மாணவர்களோடும் மேயரோடும் சேர்ந்து பேருந்து நிலையத்தின் இருக்கை வேறு வடிவில் அமைக்கப்பட்டதை அவர்கள் கண்டித்தனர்.
பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவிகளும் மாணவர்களும் மிகவும் நெருக்கமாக பழகுகிறார்கள் என்பதால் இந்தக் காரியத்தை அந்தப் பகுதி குடியிருப்பாளர் அமைப்புகள் சேர்ந்து செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மாணவ, மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு 'காதல் முத்தம்' என்று பெயரிடப்பட்டிருந்தது.

