செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
5e98c0f6-4815-4bd9-b8e8-ab1212625c31
-

கிராமங்களிலிருந்து வீசப்படும் இணைய மோசடி வலை

பாட்னா: இந்தியாவில் இணைய வசதி பன்மடங்கு மேம்பட்டுள்ளதை அடுத்து, இணையம் மூலம் நடத்தப்படும் மோசடிக் குற்றங்களும் அதிகரித்துள்ளன.

முன்பு நகரங்களில் இந்தக் குற்றங்கள் நடத்தப்பட்டன. ஆனால் தற்போது பீகார் மாநிலம் உட்பட இந்தியாவின் மத்திய, கிழக்கு மாநிலங்களில் உள்ள கிராமங்களிலிருந்து இணையம் மூலம் மோசடி வலை வீசப்படுகிறது.

வேலையின்றி தவிக்கும் இளையர்களை மோசடிக் கும்பல்கள் இதற்காகவே பயன்படுத்திக்கொள்கின்றன. வயல்களில், மரத்தடிகளில் உட்கார்ந்து கைபேசி, மடிக்கணினி ஆகியவற்றை இளையர்கள் பலர் பல மணி நேரத்துக்குப் பயன்படுத்துகின்றனர். பார்ப்பதற்கு அவர்கள் வேலை செய்வது போலத் தெரிந்தாலும் உண்மையில் அவர்கள் இணைய மோசடியில் ஈடுபடுவதாக இதுதொடர்பாக விசாரணை நடத்தி செய்தி வெளியிட்ட ஸ்ட்ரெய்டஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

டெல்லி ரயில் நிலையத்தில் சீரழிக்கப்பட்ட 30 வயது பெண்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு, 30 வயது பெண் ஒருவரை ரயில் நிலைய ஊழியர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு மேலும் இருவர் உதவி செய்ததாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்தனர். நான்கு ஊழியர்களுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தம்மை வேலையில் சேர்த்துவிடுவதாகச் சொன்னதாகப் பாதிக்கப்பட்ட பெண் கூறினார். தமது மகனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுத்து ரயில் நிலையத்தில் உள்ள அறைக்கு தம்மை அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் தாக்கியதாக அவர் கூறினார்.

காட்டில் காணாமல் போன தொழிலாளர்களில் சிலர் மீட்பு

புதுடெல்லி: அருணாசலப் பிரதேசம் குருங் குமே மாவட்டத்தில் வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், இம்மாதம் 13ஆம் தேதி இரு குழுக்களாகப் பிரிந்து ஆற்றைக் கடந்தபோது காட்டு பகுதிக்குள் வழி தெரியாமல் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய ஆகாயப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், ஏழு பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது. எஞ்சிய தொழிலாளர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.