கோல்கத்தா: மேற்கு வங்காளத்தின் கல்வி அமைச்சராக பார்த்தா சட்டர்ஜி இருந்தபோது மேற்கு வங்காள பள்ளிக் கல்விச் சேவை ஆணையத்திலும் மேற்கு வங்காள தொடக்கப்பள்ளி கல்விக் கழகத்திலும் பெருமளவில் ஊழியர் சேர்ப்பு மோசடி நடந்ததாக புகார்கள் கிளம்பியதை அடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் பார்த்தா சட்டர்ஜியைக் கைது செய்து இருக்கிறார்கள்.
அவர் இப்போது மேற்கு வங்காளத்தின் வர்த்தக, தொழில் அமைச்சராக இருக்கிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படும் பார்த்தா சட்டர்ஜிக்கு, அர்பிதா முகர்ஜி என்ற நடிகை மிகவும் அணுக்கமானவர் என்பது இப்போது தெரியவந்து இருக்கிறது.
மேற்கு வங்க நடிகையான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ.20 கோடி பணம், பெருவாரியான நகைகள், இதர விலை உயர்ந்த பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.
இந்த ஊழல் தொடர்பில் குறைந்தபட்சம் 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. விரைவில் முதல்வர் மம்தாவுக்கும் பிரச்சினை வரலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பார்த்தா சட்டர்ஜி கல்வி அமைச்சராக இருந்தபோது நடிகை அர்பிதா முகர்ஜிக்கும் அவருக்கும் இடையில் நெருக்கமான தொடர்புண்டு என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அர்பிதா 2008 ஆம் ஆண்டில் ஒடியா திரைப்படத்தில் நடித்தார். பிறகு பல திரைப்படங்களில் நடித்து இருக்கும் அவர், தொலைக்காட்சியிலும் தலைகாட்டி இருக்கிறார்.
நடிகை அர்பிதாவுக்கு எப்போதுமே உயர்ந்த இலக்கு உண்டு என்றும் அதன் காரணமாக அவர் மினோட்டி முகர்ஜி என்ற தன்சொந்த தாயையே கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்றும் அமலாக்கத் துறை தெரிவிக்கிறது.
அந்த நடிகை, கோல்கத்தாவின் வடக்குப் புறத்தில் இருக்கும் பெல்காரியா என்ற பகுதியில் சிறிய அடுக்கு வீடு ஒன்றில் தன் தாயாருடன் வசித்து வந்தார். கணவன் இல்லாத தனது தாயாரைத் தனிமையில் விட்டுவிட்டு அந்த நடிகை பிறகு தெற்கு கோல்கத்தாவில் இருக்கும் டைமண்ட் சிட்டி என்ற மிக ஆடம்பரமான வீட்டில் வசிக்கச் சென்றுவிட்டார்.
அந்த வீட்டில் இருந்துதான் பெரும் பணம், நகைகள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன.
ஆடம்பர வீட்டுக்குச் சென்றது முதலே தன் மகள் தன்னைக் காண வருவது அரிதாகிவிட்டது என்று மினோட்டி முகர்ஜி அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"என்ன வேலை செய்கிறாய் என்று என் மகளிடம் நான் பல முறை கேட்டு இருக்கிறேன். ஆனால், ஒழுங்கான பதில் வந்ததில்லை. இப்படிப்பட்ட காரியங்களில் என் மகள் ஈடுபடுவாள் என்பது தெரிந்திருந்தால் அவளுக்கு ஏற்கெனவே திருமணம் செய்து வைத்திருப்பேன்," என்று அந்தத் தாயார் கூறினார்.
அர்பிதா முகர்ஜியின் தந்தை மத்திய அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்தவர். அவர் வேலை பார்த்தபோதே மரணம் அடைந்துவிட்டார். கருணை அடிப்படையில் அர்பிதாவுக்கு வேலை வழங்க அரசாங்கம் முன்வந்தது. ஆனால், அதை மறுத்துவிட்ட அர்பிதா, நடிப்புதான் தனக்குப் பிடிக்கும் என்றும் நடிப்புத் தொழிலுக்குத் தான் போகப்போவதாகவும் கூறிவிட்டார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன் அப்போது கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜியிடம் அந்த நடிகையை நிலச் சொத்து உரிமையாளர் ஒருவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
அதையடுத்துப் பல பொது நிகழ்ச்சிகளில் அமைச்சருடன் அர்பிதாவும் காணப்பட்டார். கைதான நடிகை, தான் ஒரு அப்பாவி என்றும் சட்டத்தை தான் நம்புவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

