நால்வருக்குக் குரங்கம்மை
புதுடெல்லி: புதுடெல்லியில் ஒருவருக்குக் குரங்கம்மை பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரையும் சேர்த்து இந்தியாவில் மொத்த பாதிப்பு நான்காக அதிகரித்துள்ளது.
முதல்வர் வீட்டுக்கு அபராதம்
புதுடெல்லி: வீட்டுக்கு வெளியே குப்பைகள் கொட்டி வைப்பதாக மக்கள் தொடர்ந்து புகார் அளித்ததன் பேரில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் இல்லத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. அந்தக் கட்சியைச் சேர்ந்த முதல்வருக்குப் பாஜகவைச் சேர்ந்த சண்டிகர் மாநகராட்சி ஆணையர் மகேஷ்சின்தர் சிங் சித்து அபராதம் விதித்துள்ளார்.
60 நாடுகளுக்கு விசா வேண்டாம்
புதுடெல்லி: இந்தியாவிலிருந்து விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்று உலக கடவுச்சீட்டுத் தரவரிசைப் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.
ஜோர்தான், ஓமான், கத்தார், அல்பேனியா, செர்பியா, பூட்டான், கம்போடியா, இந்தோனீசியா, மியன்மார், இலங்கை, தாய்லாந்து, மொரீஷியஸ், சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகள் அவற்றில் அடங்கும்.
6 மாதங்களில் 74 புலிகள் மரணம்
இந்தியாவில் இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் மொத்தம் 74 புலிகள் மாண்டுவிட்டன. புலிகள் அதிகம் வாழ்கின்ற மத்தியப் பிரதேசத்தில் மட்டும் 27 புலிகள் இறந்துவிட்டன. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு மரணம் இல்லை என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. படம்: ஊடகம்
18 மணி, 44 நிமிடம் பாழானது
புதுடெல்லி: இந்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
முதல் வாரத்தில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் இடையூறு, ஒத்திவைப்பு காரணமாக 18 மணி நேரம், 44 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டு இருப்பதாக மாநிலங்களவை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மருந்து விலை 70% குறையலாம்
புதுடெல்லி: புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்களுக்கான மருந்துகள் போன்ற சில முக்கியமான மருந்துகளின் விலையை ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் கணிசமாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சில முக்கியமான மருந்துகளின் விலையை ஒழுங்குபடுத்துவதில் அரசு ஆர்வமாக இருப்பதாகவும் அரசின் இந்த விருப்பம் நிறைவேறினால் 70% வரை விலைக் குறைப்பு இருக்கும் என்றும் தெரிய வருவதாக நேற்று தகவல்கள் குறிப்பிட்டன.
ரூ.28 கோடி திமிங்கல எச்சம்
திருவனந்தபுரம்: கேரளாவில் விழிஞ்சம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ரூ.28 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை அப்பகுதி மீனவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன் எடை சுமார் 28 கிலோ எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
லாரிகளில் அடிபட்டு 11 பேர் பலி
லக்னோ: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்குத் தீர்த்த யாத்திரை சென்ற மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த பக்தர்கள் ஆறு பேர் உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பதார் என்று கிராமத்தின் அருகில் லாரி மோதியதில் மாண்டுவிட்டனர்.
இதனிடையே, கர்நாடக மாநிலம் கொபல் மாவட்டம் கூகனூர் தாலுகா பின்யல் என்ற கிராமம் அருகே கார் மீது லாரி மோதியதில் காரில் இருந்த உறவினர்கள் ஐவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

