போபால்: இந்தியாவில் சாலையோர வியாபாரியிடம் மக்காச் சோளம் வாங்குவதற்கு மத்திய இணை அமைச்சர் பேரம் பேசியதாக வெளியான தகவல் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தின் மாண்ட்லா தொகுதியில் இருந்து எம்பியான ஃபக்கன் சிங் குலாஸ்தே, இப்போது மத்திய எஃகு, ஊரக வளர்ச்சி இணையமைச்சராக இருக்கிறார்.
அம்மாநில பாஜகவின் மூத்த தலைவருமான அவர், தான் தன் தொகுதிக்குச் சென்று வந்ததைக் காட்டும் ஒரு காணொளியைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றினார்.
"சாலை ஓரத்தில் சோளம் வாங்கிச் சாப்பிட்டோம். அருமையாக இருந்தது.
"நாம் அனைவரும் உள்ளூர் விவசாயிகள், உள்ளூர் கடைக்காரர்களிடமிருந்து உணவுப் பொருள்களை வாங்க வேண்டும். இது அவர்களுக்கு வேலை வாய்ப்பையும், கலப்படமற்ற பொருள்கள் விற்பனை தடையையும் உறுதி செய்யும்," என்று காணொளியில் அமைச்சர் பேசினார்.
அமைச்சர் அந்த வியாபாரியிடம் பேசியதை அப்படியே காணொளி காட்டியது. மூன்று சோளக் கதிர் 45 ரூபாய் என்று சாலை ஓர வியாபாரியான சிறுவன் அமைச்சரிடம் சொல்வதும், விலை அதிகமாக இருக்கிறதே என அமைச்சர் கூறுவதும் காணொளியில் தெரிகிறது.
"இது சரியான விலைதான், நீங்கள் காரில் வந்திருப்பதால் நான் விலையை உயர்த்திச் சொல்லவில்லை," எனச் சிறுவன் சொல்ல, அமைச்சரோ, "இந்தப் பகுதியில் சோளம் இலவசமாகவே கிடைக்கிறது. பிறகு எதற்கு விலை உயர்வு," என்ற ரீதியில் கேள்வி எழுப்பி, பிறகு சிறுவன் கேட்ட பணத்தைக் கொடுக்கிறார்.
அமைச்சரின் காணொளியைக் கண்ட எதிர்க்கட்சிகள், 'சாலை யோரத்தில் சோளம் விற்று பிழைக்கும் சிறுவனிடம் மத்திய இணையமைச்சர் பேரம் பேசுவதா' என்று குறைகூறத் தொடங்கின. மத்தியப் பிரதேச காங்கிரஸ் மத்திய அமைச்சரைக் கடுமையாக விமர்சித்து வருவதாக நேற்று தகவல்கள் தெரிவித்தன.

