புதுடெல்லி: அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்றும் பாகிஸ்தான் அவ்வாறு நினைப்பதில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா வெற்றிபெற்று 23 ஆண்டுகள் முடிந்துள்ளன.
இதையடுத்து கார்கில் வெற்றி தினக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
"கடந்த 1990களில் கார்கிலில் உள்ள திராஸ் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். அதற்கு நாம் சரியான பதிலடி கொடுத்தோம். அதை யாராலும் மறக்க முடியாது.
"பாகிஸ்தானுடன் நடந்த கடைசி போர் 1999இல் கார்கில் போர் ஆகும். இந்தப் போர் முழு அளவிலானது அல்ல. ஆனால் ஒவ்வொரு போரிலும் நமது இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டுக்காக கொடுத்துள்ளனர்.
"ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதி முழுவதும் ஒரு 'முக்கிய போர் அரங்கமாகவே' உள்ளது," என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இந்திய வீரர்களின் துணிச்சல் மற்றும் தைரியத்தால் பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவின் பலத்தை அண்டை நாடு நன்றாக அறிந்திருக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, லடாக் எல்லைப் பகுதியில் சீன போர் விமானங்கள் பறந்தது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருபக்கம் ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே சீன ராணுவம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ராணுவம் சாடி உள்ளது. இது இந்தியாவை தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தூண்டும் முயற்சி என்றும் ராணுவம் கூறியுள்ளது.

