செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
fdcd6f05-8fee-4dda-9ce4-0700112d4574
-

ரூ.33 லட்சம் ஊதியம் கிடைத்தும் பணியை ஏற்க முடியாத சிறுவன்

மும்பை: மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த வேதாந்த் தியோகேட் என்ற பள்ளி மாணவனுக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆண்டுக்கு ரூ.33 லட்சம் ஊதியம் வழங்க முன்வந்துள்ளது. அண்மையில் 'இன்ஸ்டகிராம்' இணையதள வடிவமைப்பு தொடர்பான போட்டி ஒன்று அனைத்துலக அளவில் அறிவிக்கப்பட்டது. இதில் 15 வயதான வேதாந்தும் பங்கேற்றான். ஆயிரம் பேருக்கு மேல் இப்போட்டியில் கலந்துகொண்ட நிலையில், வேதாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், 15 வயது சிறுவனை பணியமர்த்த முடியாது என்றும் பள்ளிப் படிப்பை முடித்ததும் வேதாந்துக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் போதைப் பொருள் கடத்தல்: மூவர் கைது

சண்டிகர்: ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் போதைப்பொருள் கடத்திய மூன்று பேரை பஞ்சாப் காவல்துறை கைது செய்துள்ளது. சனிக்கிழமை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தாப்பர் என்ற கிராமத்துக்கு அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்துக்குள் ஒருவர் படுத்திருக்க, அருகே மற்றொருவர் அமர்ந்திருந்தார். எனினும், ஆம்புலன்சில் முதலுதவி, மருத்துவச் சாதனங்கள் எதுவும் இல்லை. சந்தேகம் வலுத்த நிலையில், வாகனம் முழுவதும் சோதனையிட்டபோது, நோயாளிக்கான தலையணைக்குள் எட்டு கிலோ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தவறான தகவலை வெளியிட்ட ஐந்து யுடியூப் சேனல்கள் முடக்கம்

லக்னோ: தவறான தகவல்களை வெளியிட்ட புகாரின் பேரில், ஐந்து யுடியூப் சேனல்கள் மீது உத்தரப் பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம் தொடர்பான காணொளியை அண்மையில் நடந்ததுபோல் சித்திரித்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித் தது. இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரப் பிரதேச காவல்துறை டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

தனியார் விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் தணிக்கை செய்யப்படும்

புதுடெல்லி: இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் விமான நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய விமானப் போக்கு வரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தணிக்கை செய்ய உள்ளது. இதன் மூலம் அந்நிறுவனங்களில் போதுமான எண்ணிக்கை யில், தகுதியான, அனுபவமிக்க பொறியாளர்கள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என அவர்களின் பணி நேரம், விமான பராமரிப்பு உள்ளிட்ட தரவுகள் ஆய்வுக்கு உட் படுத்தப் பட உள்ளன. அடுத்த இரு மாதங்களுக்குள் இந்த சிறப்பு தணிக்கை முடிந்துவிடும் என்றும் அண்மைக்காலமாக தனியார் விமான நிறுவனங்களின் விமானங்கள் அடிக்கடி தொழில் நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டதை அடுத்து, இந்த தணிக்கை செய்யப்பட உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

போலி தங்கப்பந்து: இளையர் கைது

அமராவதி: போலி தங்கத்தை விற்று தொழிலதிபரை ஏமாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த முனிராஜ் என்ற 22 வயது இளையர் கைதானார். இவர் தம்மிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்கப்பந்துகள் இருப்பதாகவும் அவற்றை பத்து லட்சம் ரூபாய்க்கு விற்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சீனிவாஸ்ராவ் என்ற தொழிலதிபர், தன் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து தங்கப்பந்தை வாங்கி உள்ளார். ஆனால் வீடு திரும்பிய பின், சோதித்துப் பார்த்தபோது அது போலித்தங்கம் என்பது தெரியவந்தது.