பாட்னா: இந்தியாவில் ஊடுருவிஉள்ள பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து மின்னிலக்க பணம் எனப்படும் 'கிரிப்டோ கரன்சி' மூலம் நிதி அளிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
இது தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 26 வயது இளையரான மார்கவ் அகமது டானிஷ் என்பவரை தேசியப் புலனாய்வு முகமை அண்மையில் கைது செய்தது.
இந்நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது பல்வேறு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
பீகாரில் இருந்தபடி 'காஸ்வா - இ - ஹிந்த்', 'டைரக்ட் ஜிகாத்' ஆகிய பெயர்களில் இவர் இரண்டு 'வாட்ஸ் ஆப்' குழுக்களை வழிநடத்தி வந்துள்ளார். இக்குழுக்கள் சில பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
மேலும், உலக அரங்கில் இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பும் நடவடிக்கைகளையும் டானிஷ் மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கத்தார் நாட்டில் இயங்கி வரும் அல்பால்ஹி என்ற அமைப்பிடம் இருந்து, டானிஷுக்கு நிதி வந்துள்ளது.
'கிரிப்டோ கரன்சி' பரிமாற்றத்தின்வழி அவருக்கு நிதி வந்து சேர்ந்துள்ளது என்றும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்றும் தேசியப் புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த அடிப்படைவாத குழு ஒன்றுடனும் டானிஷ் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததும் தற்போது அம்பலமாகி உள்ளது.
கைதான டானிஷிடம் விசாரணை நீடித்து வருவதாகவும் அவர் மூலம் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கக்கூடும் என்றும் தேசியப் புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

